
துவங்கியது பீமா சுகம் இணையதளம்
'பீமா சுகம் இந்தியா' கூட்டமைப்பின் இணையதளத்தை, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அஜய் சேத் துவங்கி வைத்தார்.
காப்பீடு தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே குடையின் கீழ் வழங்குவதற்காக பீமா சுகம் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக பயனர்கள், பல்வேறு நிறுவனங்களின் ஆயுள், மருத்துவ மற்றும் பொது காப்பீடு திட்டங்களை தேர்வு செய்வதோடு, பாலிசி புதுப்பித்தல், கிளைம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வரும் டிசம்பரில் இந்த இணையதளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான தளத்துக்கு மாறிய மங்களம்
தேசிய பங்குச் சந்தையின் எஸ்.எம்.இ., பிரிவில் இருந்த 'மங்களம் வேர்ல்டுவைடு' பங்குகள், நேற்று முதல் என்.எஸ்.இ.,யின் பிரதான தளத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் கடந்த 1995ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், இரும்பு, துருப்பிடிக்காத ஸ்டீல் தயாரிப்புகள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
தளப் பெயர்வு காரணமாக, நேற்றைய வர்த்தக நேர முடிவில், மங்களம் வேர்ல்டுவைடு பங்குகள் 3 சதவீதம் உயர்வு கண்டு, பங்கு ஒன்று 251.20 ரூபாயாக இருந்தது.

