/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எஸ்.ஐ.பி., முதலீடு பாதிப்பை எதிர்கொள்வது எப்படி?
/
எஸ்.ஐ.பி., முதலீடு பாதிப்பை எதிர்கொள்வது எப்படி?
ADDED : மார் 23, 2025 07:54 PM

சந்தை ஏற்ற இறக்கத்தால் மியூச்சுவல் பண்டு முதலீட்டின் பலன் சரிவை சந்திக்கும் போது, முதலீட்டாளர்கள் அதிலிருந்து மீண்டு வரும் வழிகள்.
பங்கு சந்தை போக்கு எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கடந்த சில மாதங்களாக சந்தை நிலை பெருமளவு மாறியிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் வரை, இந்திய பங்கு சந்தை சாதனை போக்கில் இருந்தது; அதன் பிறகு நிலை மாறியிருக்கிறது.
தேசிய பங்கு சந்தையில் நிப்டி, அந்த உச்ச நிலையில் இருந்து 16 சதவீதம் இழந்திருக்கிறது. மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகளும் சரிந்துள்ளன. சென்செக்சிலும் இதே நிலை தான். இந்த சரிவு மியூச்சுவல் பண்ட் முதலீடுகளையும் பாதித்திருக்கிறது.
எஸ்.ஐ.பி., பாதிப்பு
மியூச்சுவல் பண்டு திட்டங்கள் பெரும்பாலானவை இந்த ஆண்டில் அவற்றின் சராசரி பலன் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. சீரான முதலீடு முறையான எஸ்.ஐ.பி., வழியை நாடிய முதலீட்டாளர்களும் தங்கள் முதலீட்டின் பலன் சரிவு கண்டிருப்பதை உணர்ந்துள்ளனர். பல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு தொகுப்பு 20 முதல் 30 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் வகை நிதிகளில் முதலீடு செய்தவர்கள் அதிக தாக்கத்தை உணர்ந்துள்ளனர். லார்ஜ் கேப் நிதிகள் மற்றும் இ.எல்.எஸ்.எஸ்., நிதிகள் குறைந்த சரிவை சந்தித்துள்ளன.
இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் நிதிகளின் சராசரி பலன் எதிர்மறையாக அமைந்துள்ளன. ஸ்மால் கேப் நிதிகள் 22 சதவீத எதிர்மறை பலனை கண்டுள்ளன. இது, நிச்சயம் முதலீட்டாளர்களின் மனநிலையை பாதித்துள்ளது. சந்தையின் ஏறுமுகத்தால் ஈர்க்கப்பட்ட முதல் முறை முதலீட்டாளர்கள் இந்த சரிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் விளைவாக பலரும் எஸ்.ஐ.பி., முதலீட்டை நிறுத்துவது அல்லது விலக்கிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.பி., கணக்குகள் நிறுத்தப்படுவது அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளன.
என்ன வழி?
முதலீட்டின் பலன் எதிர்மறையாக அமைவதும், இழப்பு ஏற்படுவதும் நிச்சயம் முதலீட்டாளர்களை கவலை கொள்ளவே வைக்கும். எனினும், பங்கு முதலீடு என்பது நீண்ட கால நோக்கிலானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, எஸ்.ஐ.பி., முறை சந்தையின் ஏற்ற இறக்கத்தை தாக்குப்பிடிக்கக் கூடியது என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
சரியும் காலத்தில் மதிப்புள்ள பங்குகளின் அதிக யூனிட்களை வாங்கும் வாய்ப்பையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, சரிவை கண்டு பீதியில் முதலீட்டில் இருந்து வெளியேறுவதை தவிர்க்க வேண்டும்; முதலீட்டை தொடர்வதே சரியான வழியாக இருக்கும்.
அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு தொகுப்பை ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை அம்சங்கள் சரியான இருந்தால் கவலை வேண்டாம். மாறாக, முதலீடு தொகுப்பில் மாற்றம் தேவை என உணர்ந்தால் அதற்கேற்ப செயல்பட வேண்டும். குறிப்பாக, ஸ்மால் கேப் முதலீடு அதிகமாக இருந்தால் அதை சீராக்கலாம்.
இடர் அம்சம் அதிகம் இருந்தால், ஹைபிரிட் நிதிகளை பரிசீலிக்கலாம். சந்தை சரிவில் இருந்து மீண்டு ஏறுமுகம் காணும் போது பலன் பெறும் வாய்ப்புள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். அச்சம் கொள்வதற்கு பதிலாக, பொறுமையும், முதலீடு ஒழுக்கமும் முக்கியம் என்பதை உணர வேண்டும்.