/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
திருப்பூரில் பொருளாதார வளர்ச்சிக்கான சர்வே
/
திருப்பூரில் பொருளாதார வளர்ச்சிக்கான சர்வே
ADDED : மார் 25, 2025 11:27 PM

திருப்பூர்:'விக்சித் பாரத் - 2047' எனப்படும், வளர்ந்த இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025, 2030 மற்றும் 2047ம் ஆண்டுகளில், 'கிளஸ்டர்' வாரியாக, ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கான சர்வே நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவை, வரும், 2047ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்ற நாடாக உயர்த்தும் நோக்கத்துடன், 'விக்சித் பாரத் - 2047' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இதில் இடம்பெறுகிறது.
திருப்பூர், பெங்களூரு, சூரத், அகமதாபாத், லுாதியானா என, நாடு முழுதும் உள்ள பல கிளஸ்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, மூன்று கட்டங்களாக சர்வே நடக்க உள்ளது. அதன் வாயிலாக, பின்தங்கிய கிளஸ்டர்கள் ஊக்குவிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் தொழில் அமைப்புகளின் முதன்மை ஆலோசகர் பெரியசாமி கூறியதாவது:
'விக்சித் பாரத் - 2047' திட்டத்தின் கீழ், வளர்ச்சிக்கான சர்வே வரும் ஏப்ரலில் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, ஐ.நா., சபையின், தொழில் துறை மேம்பாட்டுக்கான அமைப்பான, 'யுனிடோ' வழிகாட்டுதலுடன் ஏஜன்சிகள் நியமிக்கப்பட்டு, சர்வே நடத்தப்படும். கிளஸ்டர்களில் உள்ள முக்கிய தொழில் அமைப்புகளின் கோரிக்கை கேட்டறியப்படும்.
அந்தந்த ஆண்டுகளில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் முதலீடு மற்றும் வர்த்தக இலக்கு மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவும், ஒப்பீட்டின் அடிப்படையில், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஊக்குவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.