ADDED : ஜன 18, 2024 11:43 PM

மும்பை: மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை ஆகியவை, நாளை சனிக்கிழமையன்று சிறப்பு வர்த்தக அமர்வை நடத்த உள்ளன.
பேரிடர் போன்ற காரணங்களால், பங்குச் சந்தையின் வர்த்தகத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், உடனடியாக வர்த்தகத்தை தொடர்வதற்கான வசதிகளை, நாட்டின் வேறு ஒரு இடத்திலும் சந்தைகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த மாற்று ஏற்பாடுகள் சரியாக உள்ளதா, எதிர்பாராத நிகழ்வுகளை கையாள சந்தைகள் தயாராக இருக்கின்றனவா என்பதை சோதித்து பார்க்குமாறு, பங்குச் சந்தைகளை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து நாளை, சந்தை நடவடிக்கைகளை முதன்மை வர்த்தக தளத்திலிருந்து பேரிடர் மீட்பு தளத்துக்கு மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக சிறப்பு வர்த்தகம் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு வர்த்தக அமர்வு, பங்கு மற்றும் ஈக்விட்டி டெரிவேடிவ் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. 'செபி'யின் விதிகளுக்கு உட்பட்டே இது நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

