/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் : மியூச்சுவல் பண்டு லாபத்தை எப்போது எடுக்கலாம்?
/
ஆயிரம் சந்தேகங்கள் : மியூச்சுவல் பண்டு லாபத்தை எப்போது எடுக்கலாம்?
ஆயிரம் சந்தேகங்கள் : மியூச்சுவல் பண்டு லாபத்தை எப்போது எடுக்கலாம்?
ஆயிரம் சந்தேகங்கள் : மியூச்சுவல் பண்டு லாபத்தை எப்போது எடுக்கலாம்?
ADDED : மே 25, 2025 11:47 PM

எங்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே, எங்கள் குடியிருப்போர் சங்கத்தின் வங்கி சேமிப்பு கணக்கை, நடப்பு கணக்காக மாற்றிவிட்டார்கள் வங்கி அதிகாரிகள். இப்போது என்ன நடவடிக்கை எடுப்பது?
கிருஷ்ணன் ஸ்ரீனிவாசன்,
திருத்தணி.
நமது நாட்டில் குடியிருப்போர் சங்கம் என்பது ஒரு பதிவு பெற்ற அமைப்பு. அதற்கு பல்வேறு சட்டவிதிகளும் துணை விதிகளும் பொருந்தும். இதில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு சந்தா வசூலிப்பது, அபராதங்கள் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் உண்டு.
அதனால், இந்த கணக்கை நடப்பு கணக்காகவே வங்கிகள் கருதும். உங்கள் விஷயத்தில் அது தான் நடந்திருக்கிறது. அந்த குறிப்பிட்ட வங்கி உங்களை அழைத்து இந்த விபரத்தை சொல்லிவிட்டு, பின்னர் நடப்பு கணக்காக மாற்றியிருக்கலாம். வழக்கம்போல், அவர்களுக்கு தலைக்குமேல் வேலை!
அலுவலகத்தில் எனக்கு 3 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு உள்ளது. நான் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் ரூபாய் 3 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு எடுத்துள்ளேன். அதோடு 7 லட்சம் ரூபாய் வரை கூடுதல் போனஸ் சேர்ந்துள்ளது. ஏதேனும் அவசரம் ஏற்பட்டால், இந்த மொத்த 10 லட்சத்தையும் நான் மருத்துவத்துக்கு பயன்படுத்தலாமா?
எஸ். சிவகுமார்,
மின்னஞ்சல்.
மருத்துவ காப்பீட்டில் பல்வேறு விதமான போனஸ்கள் கொடுக்கப்படுவதுண்டு. பொதுவாக, எந்தவிதமான கிளெய்ம்களும் கோரப்படவில்லை எனில், 'நோ கிளெய்ம் போனஸ்' வழங்கப்படும். முதலாண்டு 25 சதவீதமும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக எந்த கிளெய்ம்களும் இல்லையென்றால், கூடுதலாக 10 சதவீதமும் வழங்கப்படும்.
அதாவது இந்த போனஸ்கள், காப்பீட்டு தொகையோடு சேரும். உங்கள் விஷயத்தில் 10 லட்சம் ரூபாய் வரை நீங்கள் கிளெய்ம் செய்வதற்கு வாய்ப்புண்டு.
ஜி.எஸ்.டி. என்பது வர்த்தகர்கள் கட்ட வேண்டிய ஒன்றா அல்லது, வாடிக்கையாளர் கட்ட வேண்டிய ஒன்றா? வர்த்தகர்களுக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரிப்பலன், வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லையே?
பி. ராமமூர்த்தி,
மின்னஞ்சல்.
அதனால் தான் இதற்கு மறைமுக வரி என்று பெயர். வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் வரி, வர்த்தகர்கள் வாயிலாக அரசுக்கு போய் சேருகிறது. வாடிக்கையாளர்கள் தான் இறுதி நுகர்வோர், பயனர் என்பதால் அவர்களுக்கு எப்படி உள்ளீட்டு வரியின் பலன் கிடைக்கும்?
பயனரிடம் கொண்டு சேர்க்கும் வர்த்தகர்களுக்கும், அவர்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்கும் உற்பத்தியாளர்களுக்குமே உள்ளீட்டு வரி பொருந்தும்.
பயனர் கேட்கும் பொருளை உற்பத்தி செய்யவும், அதைக் கொண்டு சேர்க்கவும் தேவையான உள்கட்டுமான வசதிகள், இதர வளங்கள் ஆகிய அனைத்தையும் உருவாக்கி தருவது அரசுதானே? அதற்கான கட்டணமாக தான் ஜி.எஸ்.டி. வசூல் இருக்கிறது.
நிதி திட்டமிடலில் அது என்ன 7+7+7 முதலீட்டு உத்தி?
செ.செல்வக்கோபெருமாள்,
காஞ்சிபுரம்.
இதுபோல் நிறைய உத்திகள் உள்ளன. 'ரூல் ஆப் 72', '10--12--10 ரூல்', '20--10--12 ரூல்', '50--30--20 ரூல்', '40--40---12 ரூல்', '15--15--15 ரூல்', '25 எக்ஸ் ரூல்' போன்றவை பிரபலமானவை. எல்லாமே திட்டமிட்ட சேமிப்பு எப்படியெல்லாம் குட்டி போட்டு, குட்டி போட்டு கோடி ரூபாயைத் தொடும் என்று சொல்லிக் கொடுக்கின்றன.
இவையெல்லாவற்றிலும் ஒரு பிழை இருப்பதை தொடர்ச்சியாக பார்க்கிறேன். இதுபோன்ற நிதி சார் திட்டமிடலை மிகவும் சிறிய வயதில் இருந்தே துவங்கினால் தான் 55, 60 வயதுக்குள் எதிர்பார்த்த இலக்கு தொகையை அடைய முடிகிறது. இத்தகைய விழிப்புணர்வு உள்ள சிறிய வயது அதிர்ஷ்டசாலிகள் வெகு குறைவு.
பெரும்பாலானோருக்கு நிதி தொடர்பான எதிர்கால பயமே 40, 45 வயதுக்கு மேல் தான் ஆரம்பிக்கிறது. அவர்களுக்கு இத்தகைய முதலீட்டு உத்திகள் வெறும் பெருமூச்சுக்கு மட்டுமே உதவுகின்றன.
சில வங்கிகளில், வைப்பு நிதி திட்டங்களில் சேர்ந்தால், இலவசமாக 5 லட்ச ரூபாய் வரை காப்பீடும் கொடுக்கிறார்களே? இதை ஏற்றுக்கொள்ளலாமா?
கே.சி.கந்தசாமி,
சென்னை.
'ரெப்போ' வட்டி விகிதம் குறைந்துள்ளதால், பல்வேறு வங்கிகள், தாங்கள் வைப்பு நிதி திட்டங்களுக்கு வழங்கி வரும் வட்டியை குறைத்துள்ளன. இதனால், பல வாடிக்கையாளர்கள் வைப்பு நிதியை புதுப்பிக்க மாட்டேன் என்கின்றனர். புதியவர்களும் வரமாட்டேன் என்கின்றனர். அவர்களை ஈர்க்கும் நோக்கில் தான் இலவச காப்பீடு திட்டத்தை சில வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன.
உண்மையில், அந்த காப்பீடுக்கான சிறு எழுத்து விபரங்களை படித்து பாருங்கள். முதலாண்டு பிரீமியம் மட்டுமே வங்கி செலுத்தும், அது குழு காப்பீடு என்பதால் வேறு பல சலுகைகள் இடம்பெறாது போன்றவை அதில் உள்ளன.
நீங்கள் காப்பீடே எடுத்ததில்லை என்றால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். மற்றபடி, இதில் பெரிதாக லாபம் இருப்பது போன்று தெரியவில்லை.
மியூச்சுவல் பண்டு திட்டங்களில் இருந்து எப்போது லாப பதிவு செய்து கொள்ளலாம்?
ம.கோடீஸ்வரன்,
கோவை.
எந்த நோக்கத்துக்காக மியூச்சுவல் பண்டு திட்டங்களில் பணம் போட்டீர்களோ, அந்த இலக்கை அடைந்துவிட்டால், பணத்தை எடுத்து விடுங்கள். அல்லது பங்குச் சந்தை ரொம்பவும் உயர்ந்து விட்டது, இனிமேல் உயர வாய்ப்பில்லை, சரிய போகிறது என்று உள்மனது சொன்னால், எடுத்து விடுங்கள்.
அல்லது நீங்கள் முதலீடு செய்திருக்கும் பண்டு திட்டம், அதே பிரிவில் இருக்கும் இதர திட்டங்களோடோ, பெஞ்ச்மார்க்கோடு ஒப்பிடும்போதோ, லாபகரமாக இல்லை என்றால் எடுத்து விடுங்கள்.
எல்லாவற்றையும் எடுக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. முதலீட்டு தொகையை மட்டும் எடுக்கலாம், அல்லது முதலீட்டு தொகையை விட்டுவிட்டு, அடைந்த லாபத்தை மட்டும் எடுத்து கொள்ளலாம்.
பொதுவாக மியூச்சுவல் பண்டு திட்டங்கள் வளர்ச்சியை காண்பிக்க 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். அதற்கு முன்னதாக போட்ட பணத்தை எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். முதலீடு வளர்வதற்கு போதிய கால அவகாசம் கொடுங்கள்.
அவசர தேவை ஏற்பட்டால், பணத்தை எடுத்து தான் ஆகவேண்டும். மேலே சொன்ன உத்திகள் எதுவும், அவசர தேவை என்ற ஒற்றை காரணத்துக்கு முன்பு நிற்க முடியாது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881