/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் : டிபாசிட் வட்டி குறைவதால், பணத்தை எங்கே முதலீடு செய்வது?
/
ஆயிரம் சந்தேகங்கள் : டிபாசிட் வட்டி குறைவதால், பணத்தை எங்கே முதலீடு செய்வது?
ஆயிரம் சந்தேகங்கள் : டிபாசிட் வட்டி குறைவதால், பணத்தை எங்கே முதலீடு செய்வது?
ஆயிரம் சந்தேகங்கள் : டிபாசிட் வட்டி குறைவதால், பணத்தை எங்கே முதலீடு செய்வது?
ADDED : ஜூன் 29, 2025 09:18 PM

பணி ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, என்.பி.எஸ்., யு.பி.எஸ். ஆகிய இரு ஓய்வூதிய திட்டங்களில் எது சிறந்தது?
என்.எஸ். சண்முகம்,
கோவை.
ஓய்வு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசு பணியாளர்களில் எந்த ரிஸ்க்கும் வேண்டாம் என்று கருதுபவர்கள், யு.பி.எஸ். எனப்படும் யுனிபைடு பென்ஷன் ஸ்கீமை தேர்வு செய்வது நல்லது.
ஏனெனில், ஓய்வுக்குப் பிறகு நிரந்தரமான, ஒழுங்கான பென்ஷன் தொகை கிடைத்துவரும். இன்னும் பத்து, இருபது ஆண்டுகள் சர்வீஸ் இருக்கக்கூடிய மத்திய அரசு பணியாளர்கள் என்.பி.எஸ். எனப்படும் நேஷனல் பென்ஷன் ஸ்கீமைத் தேர்வு செய்யலாம்.
பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் புரிந்துகொள்பவர்களாக இருந்து, நீண்டகால சந்தை வளர்ச்சியில் நம்பிக்கை இருந்தால், ரிஸ்க் எடுக்கவும் துணிச்சல் இருந்தால், என்.பி.எஸ். வாயிலாக சேரும் தொகை கணிசமாக உயர்வதைப் பார்க்கலாம். அதன் வாயிலாக, கூடுதல் பென்ஷன் தொகை ஓய்வுக்காலத்தில் கிடைக்கும்.
என் தந்தை 25 ஆண்டுகளுக்கு முன், கர்நாடக வங்கியின் 89 பங்குகளுக்கான சர்ட்டிபிகேட் வைத்திருந்தார். அது தொலைந்துவிட்ட காரணத்தால், அதை டீமேட் செய்ய முடியவில்லை.
இப்போது 2011- - 12ம் ஆண்டுக்கான டிவிடெண்ட் வாரன்ட் தற்செயலாக கிடைத்தது. அதில் எல்.எப். / கிளையன்ட் ஐ.டி. நம்பர் என் அம்மாவின் பெயரில் இருக்கிறது. அந்த 89 ஷேர்களை பெற வழிகாட்டுங்கள்.
கணேசன் பாண்டியராஜ்,
மின்னஞ்சல்.
ரொம்ப நல்லது. உங்கள் அம்மா பெயரில் அந்தப் பங்குகளை அவர் வாங்கியிருக்கிறார் என்று தெரிகிறது.
கர்நாடகா வங்கியின் https://karnatakabank.com/investors/investor-information என்ற சுட்டிக்குச் செல்லவும். அங்கு நிறைய விபரங்கள் உள்ளன. அதில் சொல்லப்படுவதைப் பின்பற்றவும்.
வங்கி சேமிப்பு வட்டி விகிதம் குறைந்து கொண்டே வருகிறதே? பணத்தை வேறு எங்கே டிபாசிட் செய்தால் கூடுதல் வட்டி கிடைக்கும்?
என். சத்தியமூர்த்தி,
உடுமலை.
மியூச்சுவல் பண்டு திட்டங்களில், லிக்விட் பண்டு என்றொரு வகை இருக்கிறது. அதாவது, மக்களிடம் இருந்து திரட்டப்படும் பணம், கருவூல பில்கள், கமர்ஷியல் பத்திரங்கள், சர்டிபிகேட் ஆப் டிபாசிட் உள்ளிட்ட பல குறுகிய கால கடன் பத்திரங்களில் இந்த பண்டு முதலீடு செய்யப்படும்.
ஓரளவுக்கு தரமான கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், பணம் பத்திரமாகத் தான் இருக்கும்.
இத்தகைய லிக்விட் பண்டுகள், ஓராண்டில், 6.4 முதல் 7.5 சதவீதம் வரை வருவாய் ஈட்டுகின்றன. வங்கி சேமிப்பில் வெறும் 2.7 முதல் 3.5 சதவீத வட்டி பெற்றுக்கொண்டு இருப்பதைவிட, இந்த வருவாய் சற்று கூடுதல்தானே? மேலும், இந்த பண்டுகளில் எக்ஸிட் லோட் என்பது பெரும்பாலும் இல்லை.
பி.எப்.,இல் இருந்து பணம் எடுக்க, ஏ.டி.எம்., யு.பி.ஐ. வசதி அறிவித்தார்களே, வந்துவிட்டதா?
ஜி. லோகநாயகி,
அருப்புக்கோட்டை.
ஜூன் மாதத்திலேயே வந்துவிடும் என்றார்கள். விரைவில் வந்துவிடும் என்று தோன்றுகிறது. மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமானால் தான், விற்பனை அதிகரித்து, உற்பத்தி பெருகி, பொருளாதார வளம் அதிகமாகும் என்ற எண்ணம் நமது அரசுக்கு இருக்கிறது.
அதனால் தான், பி.எப். பணத்தை எடுப்பதற்குச் சுலபமான வழிமுறைகள் அறிமுகம் ஆகின்றன. உங்களைப் போல் பலரும், இந்தக் கேள்வியை எழுப்புவதைப் பார்க்கும்போது, இதற்கு தேவை இருப்பதும் புரிகிறது.
ஆனால், சுலபம் ஆகும் ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாலும் அபாயம் ஒன்று ஒளிந்து கொண்டிருப்பதையும் கவனப்படுத்த வேண்டியிருக்கிறது.
பி.எப்., என்பது கண்மறைவாக நடைபெறும் ஓய்வுக் காலத்துக்கான சேமிப்பு. அதை பல பணியாளர்கள், பல்வேறு காரணங்களைச் சொல்லி, அடிக்கடி எடுத்து வருகின்றனர்.
ஏ.டி.எம்., யு.பி.ஐ. வசதி எல்லாம் வருமானால், பி.எப். கணக்கில் குறைந்தபட்ச இருப்புதான் இருக்கும். பெரும்பாலானோர் அதை எடுத்துவிடவே வாய்ப்பு அதிகம்.
நமக்கு முன்னர், இதேபோன்று பி.எப். தொகையை எடுத்துக்கொள்ள அனுமதித்த நாடு மலேசியா. அவசரத் தேவைக்காக பெரும்பாலான பணத்தை எடுத்துவிட்டு, ஓய்வு பெறும்போது, வெறுங்கையோடு வெளியேறி, மீண்டும் வேலை தேடித் திண்டாடுவோர் தான் அங்கே அதிகம். அந்த அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.
நான் கடை வைத்து நடத்துகிறேன். வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று அபராதம் போட்டு விடுகிறார்கள். பல சமயங்களில் யு.பி.ஐ. வழியாக வரும் பணத்தையும் பிடித்துக் கொள்கிறார்கள். என்ன செய்வது?
மோ. கஜேந்திரன், சென்னை.
மினிமம் பேலன்ஸை பராமரிப்பேன் என்று சொல்லித் தான் நீங்கள் வங்கிக் கணக்கு துவங்கியுள்ளீர்கள். அதை பராமரிக்காதபோது, அபராதம் விதிப்பது வங்கிகளின் வேலை. அவர்களைச் சொல்லிக் குற்றமென்ன? மாதாந்திர மினிமம் பேலன்ஸ் கட்டுப்பாடு வைக்காத எஸ்.பி.ஐ., கனரா வங்கி போன்ற வங்கிகளில் கணக்கு துவங்கி பரிவர்த்தனைகளை செய்துகொள்ளுங்கள்.
வங்கி வட்டி விகிதம் குறைந்து உள்ள நிலையில், என் வீட்டுக் கடனை, சகாயமான வட்டி தரக்கூடிய வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாமா?
டி. தேவராஜ், வாட்ஸாப்
கொஞ்சம் யோசித்துச் செய்யுங்கள். நீங்கள் கடன் செலுத்த வேண்டிய மொத்த காலத்தில் பாதிக்கு மேல் தாண்டிவிட்டீர்கள் என்றால், குறைந்த வட்டியில் வேறு வங்கிக்கு மாறுவது பெரிய பலனைத் தராது.
ஏனெனில், எல்லா வீட்டுக் கடன்களிலும், முதல் பாதி காலத் தில் வட்டி பகுதி அதிகமாகவும், அசல் பகுதி குறைவாகவும் இருக்கும். இன்னொரு அம்சத்தையும் கவனியுங்கள். வேறு வங்கிக்கு போவதால், செலுத்தக் கூடிய மொத்த தொகையும் காலமும் எவ்வளவு குறையும் என்பதைக் கணக்கிடுங்கள்.
அது சகாயமாக தெரிந்தால் மாறுங்கள். வேறு வங்கிக்கு மாறும்போது, செலுத்த வேண்டிய காலத்தை அப்படியே வைத்துக்கொண்டு, இ.எம்.ஐ. எனப்படும் மாதாந்திர தவணைத் தொகையைக் குறைத்துக்கொள்ளலாம். அதன் வாயிலாக சேமிக்கப்படும் தொகையை, அசல் கடன் தொகைக்கு ஈடாகச் செலுத்தி, கடனைச் சீக்கிரம் அடைத்துவிடலாம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881