மங்களூரில் வாட்டர் மெட்ரோ சேவை ரூ.1,600 கோடியில் செயல்படுத்த திட்டம்
மங்களூரில் வாட்டர் மெட்ரோ சேவை ரூ.1,600 கோடியில் செயல்படுத்த திட்டம்
ADDED : ஜன 21, 2024 12:27 AM

தட்சிண கன்னடா : கேரள மாநிலம் கொச்சி போன்று, மங்களூரிலும் 1,600 கோடி ரூபாய் செலவில் 'வாட்டர் மெட்ரோ' திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.
பெங்களூரில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நீர்ப் போக்குவரத்து வாரிய கூட்டம் நடந்தது.
இதில், கேரள மாநிலம் கொச்சி போன்று, மங்களூரிலும் 1,600 கோடி ரூபாய் செலவில் 'வாட்டர் மெட்ரோ' திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், இதுதொடர்பாக டி.பி.ஆர்., என்ற விரிவான திட்ட அறிக்கையை விரைவில் தயாரிக்க வேண்டும்.
ஆரம்ப கட்டத்தில் பெங்கேரில் இருந்து மங்களூரு; உல்லால் முதல் மங்களூரு வரை அனைத்து வசதிகளுடன் கூடிய நீர்ப்போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்த பின், பி.பி.பி., என்று பொது தனியார் கூட்டுடன் அல்லது வேறு வழியில் செயல்படுத்துவது குறித்து வாரியம் முடிவெடுக்கும்.
மங்களூரில் நீர் போக்குவரத்து பயிற்சி மையம் துவங்க, மத்திய அரசுக்கு சொந்தமான கடல்சார் ஆய்வுகளுக்கான சிறப்பு மையத்துடன் சி.இ.எம்.எஸ்., என்ற கடல்சார் மற்றும் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கும் மையத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மூன்று மாதங்களில் இது செயல்பாட்டுக்கு வரும்.
இம்மையம் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். இம்மையத்தை முன்கூட்டியே துவக்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், சர்வதேச கப்பல்களுக்கான பெர்த் கட்டுமானமும் அடங்கும். இதன் மூலம் துறைமுகம் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் மங்கல வைத்யா, வாரிய பிரமுகர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

