ADDED : ஜூன் 18, 2025 02:28 AM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விபச்சார விடுதி நடத்தி வந்த இரண்டு போலீஸ்காரர்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோழிக்கோடு மலப்பரம்பு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக நடைக்காவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விபச்சார விடுதியில் கைதானவர்களுக்கும் கோழிகோட்டைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் ஷைஜித் மற்றும் சனித் ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து இருவரும் தலைமறைவாயினர். அவர்களை போலீசார் தேடி வந்தனர். கோழிக்கோடு அருகே தாமரைசேரி பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். 2 பேரும் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

