ரயில் பாதைக்காக 20 வீடு அகற்றம்; வேறிடத்தில் கட்டி தர அரசு முடிவு
ரயில் பாதைக்காக 20 வீடு அகற்றம்; வேறிடத்தில் கட்டி தர அரசு முடிவு
ADDED : ஜன 19, 2024 12:31 AM

தங்கவயல் : தங்கவயல் மாரிகுப்பம்- - குப்பம் இணைப்பு ரயில் பாதை அமைக்கும் பணிக்காக விரும்பாக் ஷி புரா கிராமத்தில் 20க்கும் மேற்பட்டோரின் வீடுகள் அகற்றப்படுகின்றன. அவர்களுக்கு வேறொரு இடத்தில் வீடுகள் கட்டித் தருவதாக தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா உறுதி அளித்தார்.
மாரிகுப்பம் -- குப்பம் ரயில்வே இணைப்பு பாதை திட்டம் நிறைவேறி வருகிறது. மத்திய அரசு இதற்காக 500 கோடி ரூபாயில் திட்டம் நிறைவேற்றியது. 1 கிலோ மீட்டர் தூரம் ரயில்வே இணைப்புக்கு 23 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை 236 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி உள்ளது. மாரிகுப்பம் -- குப்பம்23 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதன்ரயில்வே இணைப்பு பணிகள் வேகம் எடுத்துள்ளது. இதற்காக,ஆந்திர மாநில அரசு 11 கி.மீ., தங்கச் சுரங்க நிறுவனத்தின் 8 கி.மீ., கர்நாடக மாநில அரசின் 5 கி.மீ., நீளம் வரையில் நிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிலம் ஒதுக்குவதில் தான் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஒருவழியாக 2023 டிசம்பரில் நிலத்தகராறு தீர்க்கப்பட்டது.
இந்நிலையில், ரயில் பாதைகள் அமைக்க 15 சுரங்க பாலங்களும் அமைக்கப்படுகிறது. மாரிகுப்பம் அடுத்த விருபாக் ஷிபுரா கிராமத்தில் ரயில் பாதை அமைக்கும் இடத்தில் 20 வீடுகளை அகற்ற வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
எனவே, இப்பகுதியில் நேற்று தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, தங்கவயல் தாசில்தார் நாகவேணி, தாலுகா பஞ்சாயத்து தலைமை அதிகாரி மஞ்சுநாத் ஹர்தி, திட்ட அதிகாரி சந்திரகலா உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வீடுகளை காலி செய்ய வேண்டி இருப்பதால், அவர்களுக்கு அரசின் காலி நிலம் ஒதுக்கி, வீடுகள் கட்டித்தர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அப்போது, கிராம பஞ்சாயத்து பிரமுகர்கள், கிராம பகுதி பிளாக் காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண ரெட்டி, வக்கீல் பத்மநாப ரெட்டி உட்பட பலர் உடன் இருந்தனர்.

