UPDATED : மே 14, 2025 04:10 AM
ADDED : மே 14, 2025 02:55 AM

அமிர்தசரஸ் : பஞ்சாபில், விஷ சாராயம் குடித்த 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக, முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பங்கலி, படல்புரி, மராரி கலான், தெரேவால், தல்வண்டி குமான் ஆகிய ஐந்து கிராமங்களில், விஷ சாராயம் குடித்த 21 பேர், நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும், 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.
![]() |
தகவலறிந்த போலீசார், ஐந்து கிராமங்களுக்கும் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். விஷ சாராயம் விற்பனை செய்த முக்கிய குற்றவாளியான பிரப்ஜித் சிங் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் கூறுகையில், 'பங்கலி, படல்புரி உள்ளிட்ட கிராமங்களில், விஷ சாராயம் அருந்திய நபர்கள் உயிரிழந்து வருவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக இது குறித்து விசாரித்தோம்.
'விஷ சாராயத்தை விற்பனை செய்த முக்கிய குற்றவாளி பிரப்ஜித் சிங், அவரது கூட்டாளி சஹாப் சிங் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளோம்.
'அமிர்தசரஸ் உட்பட மாநிலத்தின் வேறு எந்த பகுதியிலாவது விஷ சாராயம் விற்கப்படுகிறதா என விசாரித்து வருகிறோம். இதை விற்பனை செய்வோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
இந்த விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், சிரோன்மணி அகாலி தளம் தலைவருமான சுக்பீர் சிங் பாதல், 'காங்., ஆட்சியிலும் இந்த கொடூரம் நிகழ்ந்தது. தற்போதும் நடக்கிறது' என குறிப்பிட்டார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, அமிர்தசரசின் மஜிதா பகுதி டி.எஸ்.பி., அமோலக் சிங், இன்ஸ் பெக்டர் அவ்தார் சிங் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


