ADDED : ஜன 19, 2024 01:49 AM
இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி, கூகி - மெய்டி பிரிவினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது.
இதில், 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, மணிப்பூரில் தற்போது படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நிங்தோகோங்கா குனவ் என்ற இடத்தில், விவசாயத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆயுதமேந்திய கும்பல், அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.
இதில், 60 வயது முதியவர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்தி விட்டு, ஆயுதமேந்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரின் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில், கடந்த இரு நாட்களில் மட்டும், இந்த நான்கு பேர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களில், நம் அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என, மணிப்பூர் பாதுகாப்பு செயலர் தெரிவித்தார்.

