40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு விசாரணை; நீதிபதி ஆணையத்தில் ஊழியர் பற்றாக்குறை
40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு விசாரணை; நீதிபதி ஆணையத்தில் ஊழியர் பற்றாக்குறை
ADDED : ஜன 19, 2024 12:35 AM
பெங்களூரு : முந்தைய பா.ஜ., ஆட்சியில், ஐந்து ஆண்டுகளில் நடந்துள்ள பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம், ஊழியர்கள் பற்றாக்குறையால் நெருக்கடியில் சிக்கியது.
'முந்தைய பா.ஜ., அரசில், பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், சிறிய நீர்ப்பாசனம், நகர வளர்ச்சி, கிராம வளர்ச்சி துறைகளில், முறைகேடு நடந்துள்ளது. பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களிடம், 40 சதவீதம் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் தோல்விக்கு, இதுவும் ஒரு காரணம்' என, கூறப்பட்டது. காங்கிரசார் இதையே அஸ்திரமாக பயன்படுத்தி பிரசாரம் செய்தனர்.
இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என, வலியுறுத்தல் எழுந்தது. கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், முந்தைய அரசில் ஐந்து துறைகளில், 2019 முதல் 2023 வரை நடந்துள்ள பணிகளில் நடந்துள்ளதாக கூறப்படும் ஊழல் குறித்து விசாரணை நடத்த, நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில், விசாரணை ஆணையம் அமைத்து, 2023 ஆகஸ்ட் 25ல் அரசு உத்தரவிட்டது.
விசாரணை ஆணையமும், விசாரணை நடத்துகிறது. துவக்கத்தில் ஆணையத்துக்கு ஒப்பந்த அடிப்படையில், ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
சட்ட வல்லுனர்கள், விசாரணை அதிகாரிகள், அலுவலக உதவியாளர்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், ஓட்டுனர்கள், குமாஸ்தாக்கள் உட்பட, 57 ஊழியர்களை நியமிக்கும்படி கோரி, நீதிபதி நாகமோகன் தாஸ், செப்டம்பர் 23ல் பொதுப்பணித்துறை தலைமை செயலருக்கு கடிதம் எழுதினார்.
ஊழியர்களை நியமிக்க, நிதித்துறையிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி கோரினர். ஆனால் நிதித்துறை 24 பணியிடங்களை நியமிக்க, ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி 24 பணியிடங்களை உருவாக்கி, நடப்பாண்டு ஜனவரி 12ல் உத்தரவிட்டது. கூடுதல் பணியிடங்களை உருவாக்கும்படி, மீண்டும் கோரிக்கை விடுக்க நீதிபதி நாகமோகன் தாஸ் முடிவு செய்துள்ளார்.
தேவையான ஊழியர்கள் இல்லாததால், புகார்களை ஆய்வு செய்வது, கோப்புகளை தயாரிப்பது போன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஆணையத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மூத்த வல்லுனர்கள், பதிவாளர்கள், குமாஸ்தர்கள், டி குரூப் ஊழியர்களுக்கு, மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஆணைய அதிகாரிகள், நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
பொதுப்பணித்துறை பொறியாளர் துருகப்பா கூறுகையில், ஆணைய அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, 2.58 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஊதியம் வழங்கப்படும், என்றார்
நீதிபதி நாகமோகன் தாஸ் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட ஐந்து துறைகளில் இருந்து, ஆயிரக்கணக்கான கோப்புகள், ஆணைய அலுவலகத்துக்கு வந்துள்ளன. ஆனால் ஊழியர்கள் இல்லாததால், கோப்புகளை எடுத்து வைக்கவும் முடியவில்லை.
ஆணையம் கோரிய ஊழியர் எண்ணிக்கைக்கும், அரசு வழங்கிய எண்ணிக்கைக்கும், அதிக வித்தியாசம் உள்ளது. தேவையான அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாவிட்டால், நிர்ணயித்த காலத்துக்குள், விசாரணையை முடிப்பது கஷ்டம். எனவே ஊழியர்களை நியமிக்கும்படி, மீண்டும் வேண்டுகோள் விடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

