ADDED : பிப் 01, 2024 11:02 PM

கர்நாடகாவில் மைசூரு உட்பட சில மாவட்டங்களில், கோமதீஸ்வரர் சிலை இருந்தாலும், ஸ்ரவணபெலகோலாவில் இருக்கும் சிலை போன்று உயரமாக இல்லை.
ஸ்ரவணபெலகோலா ஜெயின் கோவிலை பிரதிபலிக்கும் வகையில், துமகூரிலும் ஜெயின் கோவில் உள்ளது.
மயில் கோவில்
துமகூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது மந்தாரகிரி மலை. இது பசதி பெட்டா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் 12 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட நான்கு சிறிய ஜெயின் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் சந்திரபிரபா, பார்ஷ்வநாதர், சுபார்ஷ்வநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன.
மலையின் அடிவாரத்தில், ஸ்ரவணபெலகோலாவில் இருக்கும் சிலை போன்று, 57 அடி உயரத்தில் கோமதீஸ்வரர் சிலை உள்ளது.
இந்த சிலையின் அருகில், திகம்பர துறவிகள் பயன்படுத்தும் பிஞ்சி மயில் இறகு விசிறி போன்ற அமைப்பில், ஜெயின் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த கோவிலை பிஞ்சி அல்லது மயில் கோவில் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
சூரிய அஸ்தமனம்
அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் உள்ள கோவில்களுக்கு 450 படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும்.
படிக்கட்டுகளில் ஏறும் போது ஓய்வு தேவைப்பட்டால், பாறைகள் மீது அமரலாம்.
பாறையில் அமர்ந்து அடிவாரத்தில் இருக்கும் ஜெயின் கோவில், சுற்றுவட்டார பகுதிகளை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
கோவிலின் பின்பக்கம் ஏரி உள்ளது. மாலை நேரத்தில் செல்வோர், பாறையில் நின்று சூர்ய அஸ்தமனத்தை பார்க்கலாம். மொத்தத்தில் சாமி தரிசனம், குடும்பத்துடன் நேரத்தை கழிக்க ஏற்ற இடமாக, மந்தாரகிரி மலை அமைந்து உள்ளது.
பெங்களூரில் இருந்து மந்தாரகிரி 62 கி.மீ., துாரத்தில் உள்ளது. கார், பைக்குகளில் சென்றால், இரண்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம். மலை அடிவாரத்தில் வாகன நிறுத்தும் வசதி உள்ளது.
பஸ்சில் செல்வோர் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து துமகூரு செல்லும் பஸ்சில் பயணம் செய்து, பண்டிதானஹள்ளி கிராசில் இறங்கி அங்கிருந்து கோவிலை அடையலாம்
- நமது நிருபர் - .

