3 அங்குல திராட்சையை பயிரிட்டு லாபம் சம்பாதிக்கும் விவசாயி
3 அங்குல திராட்சையை பயிரிட்டு லாபம் சம்பாதிக்கும் விவசாயி
ADDED : ஜன 13, 2024 11:08 PM

பெலகாவியில் விவசாயி ஒருவர், மூன்று அங்குலத்தில் நீள திராட்சையை பயிரிட்டு, லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.
பொதுவாக நாம் அனைவரும் ஒன்றரை அங்குல நீளமுள்ள திராட்சையை பார்த்திருக்கிறோம். ஆனால், பெலகாவி மாவட்டம் ஜட்டாவின் பாசராகி கிராமத்தைச் சேர்ந்த சச்சின் சிவப்பா தொட்டமாலா, வி.எஸ்.டி., வகை மூன்று அங்குல நீளமுள்ள திராட்சையை பயிரிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:
மஹாராஷ்டிரா மாநிலம், கவதேமஹாகலா கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில், ஒரே செடியில் வித்தியாசமான திராட்ச கொத்தை கண்டேன்.
அவரிடம் விபரம் கேட்டு, நானும் 10 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டேன். ஒரே செடியில் கொத்தாக பல திராட்சைகள் மூன்று அங்குலத்துக்கு வளர்ந்தன.
தற்போது கர்நாடகா மட்டுமின்றி, மஹாராஷ்டிராவை சேர்ந்த விவசாயிகளும் இங்கு வந்து, இதன் விபரத்தை கேட்டு செல்கின்றனர். மற்ற திராட்சைகளை விட, இந்த 'வி.எஸ்.டி'., ரக திராட்சைக்கு சந்தையில் கிராக்கி உள்ளது.
ஒரு ஏக்கருக்கு 20 டன் வரை அறுவடை செய்யலாம். கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்கிறேன்.
உள்நாடு மட்டுமின்றி, துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட மற்ற நாடுகளுக்கு மும்பை வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது சாப்பிடவும் மிருதுவாக இருப்பதால், அனைவரும் விரும்புகின்றனர்.
இப்பகுதியில், 70 ஏக்கரில் இத்தகைய திராட்சை பயிரிடப்பட்டு உள்ளது. இந்த ரகத்தின் விலையும் குறைவு; நோய் பாதிப்பு இல்லாததும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.
நாங்கள் ஒன்பது சகோதர, சகோதரிகள், ஒன்றாக வேலை செய்கிறோம். 18 கி.மீ., துாரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, விவசாயம் செய்து வருமானம் பெற்று வருகிறோம்.
வெளிநாடுகளில் இருந்து இந்த ரகத்துக்கு கிராக்கி உள்ளதால், எங்களிடம் வாங்க இடைத்தரகர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
கடந்தாண்டு திராட்சை, நான்கு அங்குலம் நீளமாக இருந்தது. இருப்பினும் இந்தாண்டு மோசமான வானிலை காரணமாக, மூன்று அங்கலம் உயரம் மட்டுமே வளர்ந்தது. ஏக்கருக்கு 20 டன் மகசூல் கிடைத்து, நல்ல வருமானமும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்பயிர் குறித்து தகவல் கேட்க விரும்புவோர், 93076 46705 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

