
விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. விவசாயிகள் நஷ்டமடைகின்றனர் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் விவசாயத்தை லாபகரமாக்கலாம் என்பதை, விவசாயி ஒருவர் நிரூபித்துள்ளார். மற்றவருக்கும் முன் மாதிரியாக திகழ்கிறார்.
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பது, மறுக்க முடியாத உண்மை. ஆனால் கால காலத்துக்கு மழை பெய்யாமலோ அல்லது அதிக மழையினாலோ விளைச்சலை பறிகொடுத்து, விவசாயிகள் அல்லல்படுகின்றனர். விவசாயம் லாபம் தரும் தொழில் அல்ல. நஷ்டமே அதிகம் என, புலம்புவோர் அதிகம். விவசாயி மஞ்சேகவுடா முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு, அனைவரின் கவனத்தை தன் வசம் ஈர்த்துள்ளார்.
மாண்டியா, கே.ஆர்., பேட்டின், கோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சேகவுடா, 48. இவர் விவசாயி மட்டுமல்ல, விஞ்ஞானியும் கூட.
தன் புத்தி கூர்மையால் மக்களுக்கு பயனுள்ள பல சாதனங்களை கண்டுபிடித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற, ரோபோட் தயாரித்துள்ளார். இதனால் அவர் 'ரோபோ மஞ்சேகவுடா' என, அழைக்கப்படுகிறார்.
நீரில் மூழ்கிய பொருட்களை கண்டுபிடிக்கும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். கடலில் கலந்து வீணாகும் தண்ணீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்கிறார்.
இந்த மின்சாரத்தை கிராமத்தின் அரசு பள்ளி, கோவில், சாலைகள், ஏழைகளின் வீடுகளுக்கு இலவசமாக வினியோகிக்கிறார். ஓடையில் இருந்து தண்ணீரை மேலே எடுத்து, நிலத்தில் பாய்ச்சி விவசாயம் செய்கிறார். நவீன தொழில்நுட்ப முறையில் விவசாயம் செய்கிறார்.
ராணுவத்தில் எதிரிகளுடன் போரிட்டு அழிக்க, ரோபோ சிப்பாய்கள் உட்பட, பல சாதனங்களை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை விவசாயத்திலும் கை தேர்ந்தவர்.
செயற்கையாக குளம் அமைத்து, அதில் மீன் வளர்த்து லாபம் சம்பாதிக்கிறார். மீன் வளர்க்க ஏரிகள் இல்லை என, பலரும் கூறும் நிலையில், அரை ஏக்கர் விவசாய நிலத்தில், பாலி ஹவுசுக்குள் செயற்கை குளத்தை அமைத்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதை, செய்து காண்பித்துள்ளார்.
மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உள்ள சிலாபியா, மொரல், ரூப்சந்த், காட்லா உட்பட பலவிதமான மீன்கள் வளர்க்கிறார். மீன் பிரியர்கள் முள்கள் இல்லாத மீன்களை சாப்பிட விரும்புவதால், இத்தகைய மீன்களையே மஞ்சேகவுடா வளர்க்கிறார். குளத்தில் செயற்கை ஆக்சிஜன் வசதி செய்துள்ளார். நோய் எதிர்ப்பு மருந்துகள், ஊட்டச்சத்தான தீவனம் கொடுத்து, மீன்கள் வளர்க்கிறார்.
மீன் வளர்ப்புக்காக, மீன் வளத்துறையிடம் ஆலோசனைகள் பெற்றுள்ளார். துறையின் வழி காட்டுதல், பயிற்சி பெற்று அரை ஏக்கர் நிலத்தில் மீன் வளர்த்து, ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வருவாய் பெறுகிறார்.
அரை ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டால், ஆண்டுக்கு 50,000 ரூபாயும் லாபம் கிடைக்காது. எனவே, மீன் வளர்ப்பில் லாபம் பெறலாம் என்பது, இவரது கருத்தாகும்.
விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். எனவே, பல முறை நஷ்டத்தை அனுபவிக்கின்றனர். விவசாயத்துடன் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு தொழில் நடத்தலாம்.
தண்ணீர் வசதி இருந்தால், மீன் வளர்த்து லாபம் பெறலாம் என்பதை, விவசாயி மஞ்சேகவுடா சாதித்து காண்பித்துள்ளார். மீன் வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு, தேவையான தகவல்களை தெரிவித்து உதவுகிறார்.

