UPDATED : ஜன 23, 2024 01:54 PM
ADDED : ஜன 23, 2024 12:52 AM
அயோத்தி: பக்தர்கள் பல நுாற்றாண்டுகளாக காத்திருக்க நேர்ந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நேற்று முன்னின்று நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''புதிய சகாப்தம் துவங்கியது,'' என பெரும் ஆரவாரத்துக்கு நடுவே பிரகடனம் செய்தார்.
விமரிசையாக நடந்தேறிய பால ராமர் பிராண பிரதிஷ்டையைத் தொடர்ந்து, ராமர் கோவிலின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு மலர் துாவி வாழ்த்தினார் பிரதமர்.
புதிய உத்வேகம்
அதையடுத்து, சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த பல ஆயிரம் ராம பக்தர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார்:
பல நுாற்றாண்டு காத்திருப்பு, கணக்கில்லாத தியாகங்கள், நீண்ட தவத்துக்குப் பின், ராமர் இங்கு மீண்டும் வந்து விட்டார். பொறுமையுடன் காத்திருந்த நாட்டு மக்களை இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.
கோவிலின் கர்ப்பகிரகத்தில் இருந்தபோது உணர்ந்த தெய்வீகத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னுடைய உடலுக்கு புதிய சக்தியும், மனதுக்கு புதிய உத்வேகமும் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன்.
ராம் லல்லா இனி கூடாரத்தில் தங்க வேண்டியிருக்காது. இந்த புனிதமான கோவில், இனி அவருடைய இல்லமாக இருக்கும். இங்கு நடந்த நிகழ்வுகளை நாடு முழுதும் மற்றும் உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் பார்த்து அனுபவித்திருப்பர்.
இந்த கணம், இயற்கைக்கு அப்பாற்பட்டது; மிகவும் புண்ணியமானது. இங்குள்ள சூழல் மற்றும் புதிய உத்வேகம் ஆகியவற்றை ராமர் நமக்கு அளித்த ஆசியாகவே பார்க்கிறேன். இந்த நாளில் உதயமான சூரியன், நமக்குள் புதிய ஒளியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த, 2024, ஜன., 22ம் தேதி, நாள்காட்டியில் ஒரு நாளாக மட்டும் விளங்கவில்லை. புதிய காலச்சக்கரத்தின் துவக்கமாகும். ராம ஜென்மபூமி கோவிலுக்கான பூமி பூஜை நடந்ததில் இருந்து, கோவில் கட்டுமானப் பணி முன்னேற்றங்கள், நாடு முழுதும் மகிழ்ச்சியையும் திருவிழா உணர்வையும் ஏற்படுத்தியது.
பல நுாற்றாண்டு காத்திருப்பு பாரம்பரியத்தால், நமக்கு ராமர் கோவில் கிடைத்துள்ளது. அடிமை தனத்தை உடைத்து, தன் பழைய பாரம்பரியத்தில் இருந்து புதிய உத்வேகத்தைப் பெறும் நாடே புதிய வரலாற்றை படைக்க முடியும்.
இந்த நாள், அடுத்து வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பேசப்படும். ராமபிரானின் ஆசியால், இந்த மறக்க முடியாத நிகழ்ச்சியில் பங்கேற்கும் அபூர்வ பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த நாள், செயல்கள், ஆகாயம் மற்றும் அனைத்தும் தெய்வீகத்தால் தளும்புகிறது. இது சாதாரண நாளல்ல; மிகச் சிறப்பான நினைவுகளுடன் நம் பாதையை தொடர்வதற்காக நமக்கு அளிக்கப்பட்ட கொடை.
ராமரின் ஒவ்வொரு பணியிலும் உடனிருந்த ஹனுமன், லட்சுமணன், பரதன், சத்ருகணன், மாதா சீதாதேவியை வணங்குகிறேன். இந்த நிகழ்ச்சியில் அவர்களுடைய தெய்வீகமும் நிறைந்திருந்ததை நாம் உணர்கிறோம்.
இந்த நேரத்தில் ராமரிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இந்தக் கோவிலை நாம் எப்பொழுதோ எழுப்பியிருக்க வேண்டும். அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளதால், ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நம்புகிறேன்.
ராமாயணத்தில், 14 ஆண்டுகள் அவர் வனவாசம் சென்றதை ஏற்க முடியாமல் மக்கள் தவித்தனர். ஆனால் அதன்பின் அயோத்தியும், நாட்டு மக்களும் பல நுாற்றாண்டுகளாக அவரை பிரிந்திருக்க நேரிட்டது. நம் அரசியலமைப்பு சட்டத்தின் உண்மையான பிரதியில் ராமர் இடம்பெற்றுள்ளார்.
ஆனாலும், நாட்டின் விடுதலைக்கு பின்பும் ராமருக்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியதாயிற்று.
இந்த நேரத்தில், நீதியின் புனிதத்தை கட்டிக்காத்த நம் நீதித்துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன். நியாயமான வழியில் கிடைத்த நீதியின் பேரில் ஸ்ரீ ராமருக்கான கோவில், மிக வேகமாக கட்டப்பட்டுள்ளது.
எதையும் சாதிக்கலாம்
தற்போது நாம் அமிர்த காலத்தில் உள்ளோம். நாட்டை வளர்ந்த நாடாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.
அந்த இலக்கை நாம் எட்டுவதற்கு ஒரு சாட்சியாக இந்தக் கோவில் விளங்கும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து, ஒரே நோக்கத்தோடு செயல்பட்டால், எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்தக் கோவில் நமக்கு உணர்த்துகிறது.
இது இந்தியாவின் காலம்; இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. பல நுாற்றாண்டு கால காத்திருப்புக்கு பின், இந்தக் கோவில் நம்மை இணைத்துஉள்ளது. இந்த புது யுகத்துக்காக காத்திருந்தோம். இத்துடன் நாம் நின்றுவிடக் கூடாது. தொடர்ந்து வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டும் பணிகளைத் தொடர்வோம். புதிய சகாப்தம் உருவாகியுள்ளது; பல புதிய சகாப்தங்களையும் படைப்போம்.இவ்வாறு மோடி பேசினார்.

