போதை பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை: முதல்வருக்கு ம.ஜ.த., - எம்.எல்.சி., கடிதம்
போதை பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை: முதல்வருக்கு ம.ஜ.த., - எம்.எல்.சி., கடிதம்
ADDED : ஜன 19, 2024 12:32 AM

பெங்களூரு : 'கல்வி நிறுவனங்களின் சுற்றுப்பகுதிகள் உட்பட, மற்ற பகுதிகளில் பல ஆண்டுகளாக வேரூன்றிய போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ம.ஜ.த., - எம்.எல்.சி., தினேஷ் கூளிகவுடா வலியுறுத்தினார்.
இது குறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கும், அவர் எழுதியுள்ள கடிதம்:
போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வலுவான சட்டம் வகுக்க வேண்டும். போதைப் பொருட்களை கட்டுப்படுத்த, மாவட்ட அளவில், சிறப்பு கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டிகளுக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும்.
நான் மிகவும் வருத்தம் மற்றும் வலியுடன், இந்த கடிதத்தை எழுதுகிறேன். போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் பெற்றோர் சார்பில் இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இன்று போதைப் பொருளுக்கு சிறார்கள் பலியாகின்றனர். எனவே, இதை வேருடன் பிடுங்கி எறிய வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் சுற்றுப்பகுதிகள் உட்பட, மற்ற பகுதிகளில் பல ஆண்டுகளாக வேரூன்றிய போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப் பொருளை கட்டுப்படுத்த, பொது மக்களின் ஒத்துழைப்பை பெற, உதவி எண் துவங்க வேண்டும்.
மக்கள் தகவல் தெவிக்க முன்வர ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களின் பெயர், முகவரியை ரகசியமாக வைப்பதை உணர்த்த வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில் 1 கி.மீ., எல்லையில் சிறப்பு ரோந்து வசதி செய்ய வேண்டும்.
போதைப் பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப் பொருள் குறித்து தெரிந்தால், தங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி பள்ளி முக்கியஸ்தர்கள், மாணவர்கள், பெற்றோர் தகவல் தெரிவிக்கும்படி, அறிவுறுத்த வேண்டும்.
போதைப் பொருட்கள் வழக்கில் கைதானவர்களுக்கு, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இதற்காக சட்டத்தை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

