ADDED : ஜன 24, 2024 05:56 AM
பெங்களூரு: கர்நாடக அரசின் 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து, துறைவாரியாக அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா நேற்று 2வது நாளாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகாவில் நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, பிப்ரவரி 16ம் தேதி, 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முதல் கட்டமாக இம்மாதம் 19ம் தேதி, 16 துறைகள் சம்பந்தமாக, அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், 2வது நாளாக, வீட்டு வசதி, சிறுபான்மையினர் நலன், உள்துறை, வருவாய், தொழிலாளர் நலன், கனரக தொழில், அடிப்படை மேம்பாடு, பொதுப்பணி, சிறிய தொழில், மின்சாரம், சுற்றுலா, சட்டம், போக்குவரத்து, ஹிந்து சமய அறநிலையம், சர்க்கரை, ஜவளி, நகர வளர்ச்சி, திட்டம், நகராட்சி, ஹஜ், மீன்வளம், துறைமுகங்கள், உள்நாட்டு போக்குவரத்து ஆகிய 23 துறைகள் சம்பந்தமாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், மாநில தலைமை செயலர் ரஜனீஷ் கோயல், திட்ட இயக்குனர் ஷாலினி ரஜனீஷ் உட்பட உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பங்கேற்று, தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

