உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; 'லொள்ளு' கேள்விகள் கேட்கும் 'ஏர் இந்தியா'
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; 'லொள்ளு' கேள்விகள் கேட்கும் 'ஏர் இந்தியா'
ADDED : ஜூலை 05, 2025 01:04 AM

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிதி, ஆதார விபரங்கள் உட்பட பல்வேறு கேள்விகளை கேட்டு, 'ஏர் இந்தியா' நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த சட்ட நிறுவனம் குற்றஞ்சாட்டிஉள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, கடந்த மாதம் 12ம் தேதி புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியது.
சர்ச்சை
இதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட, 275 பேர் உயிரிழந்தனர். இதில், பிரிட்டனை சேர்ந்த, 40 பேரும் அடங்குவர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் தரப்படும் என, 'ஏர் இந்தியா' அறிவித்தது.
இந்நிலையில், உறவு களை இழந்தோர் குடும்பத்தினர் இழப்பீடு தொகையைப் பெற கடுமையான விதிகளை, 'ஏர் இந்தியா' விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
இறந்தவர்களின் விபரம் குறித்து முழு தகவல்களை பெறும் வகையில், விண்ணப்ப படிவம் ஒன்றை, 'ஏர் இந்தியா' வெளியிட்டுள்ளது.
அதில், குடும்பத்தின் நிதி சார்ந்த தகவல்கள் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து, நானாவதி என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பிரிட்டனின் சட்ட நிறுவனமான ஸ்டீவர்ட்ஸ், அந்நாட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களின் சார்பாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தைச் சேர்ந்த பீட்டர் நீனன் கூறியதாவது:
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் துயரத்தில் இருக்கும் நிலையில், குடும்பத்தின் நிதி சார்ந்த விபரங்களை தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறந்தவர் பணியில் இருந்தாரா? அப்படியென்றால், அவர் வேலை செய்த இடம், முகவரி, முதலாளியின் தொடர்பு எண் உள்ளிட்டவை அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளன.
இழப்பீட்டின் இறுதி தொகை, சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும் தகவல்களால், இழப்பீட்டுத் தொகையை குறைக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, 'ஏர் இந்தியா'வை தொடர்பு கொண்ட போது, விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டால் இழப்பீடு கிடையாது எனக் கூறியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் ஸ்டீவர்ட்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
குற்றச்சாட்டு
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை, 'ஏர் இந்தியா' மறுத்துள்ளது. 'ஏர் இந்தியா மீது இழப்பீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது மட்டுமின்றி தவறானதும் கூட.
'பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினரிடம் மட்டுமே அவர்களது உறவு முறைகள் பற்றி அறியவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக இழப்பீடு சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே தகவல்கள் கேட்கப்படுகின்றன.
'மேலும், நாங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்' என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.