நண்பருடன் பைக்கில் சென்ற முஸ்லிம் பெண் மீது தாக்குதல்
நண்பருடன் பைக்கில் சென்ற முஸ்லிம் பெண் மீது தாக்குதல்
ADDED : ஜன 21, 2024 12:33 AM
ஹாவேரி : வேறு மதத்தை சேர்ந்த ஆண் நண்பருடன் பைக்கில் சென்றதால், முஸ்லிம் பெண்ணை தாக்கிய, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹாவேரி பேடகி டவுனை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். பேடகியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அங்கு வேலை செய்யும் வேறு மத வாலிபரும், முஸ்லிம் பெண்ணும் நண்பர்களாக பழகினர்.
நேற்று முன்தினம் இரவு பேடகி அருகே, அகசனஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ஆண் நண்பருடன், முஸ்லிம் பெண் பைக்கில் சென்றார்.
இதை கவனித்த, முஸ்லிம் பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், பைக்கை வழிமறித்து பெண்ணிடமும், அவரது நண்பரிடமும் தகராறு செய்து இருவரையும் தாக்கினர்.
இதுகுறித்து, அந்த பெண் அளித்த புகாரில் பேடகி போலீசார், ஒன்பது பேரை நேற்று முன்தினம் இரவே கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அப்துல் காதர் தந்துார், மன்சூர் தந்துார், மெகபுப்கான் படிகேரோ, அல்பாஸ், ரியாஸ், அப்துல் தேசுரா, காதர் கனகே, சலீம் சாப், மெகபுப் அலி ஹலகேரி என்பது தெரிந்தது. அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
ஹாவேரி ஹனகல்லில் வேறு மத ஆண் நண்பருடன், லாட்ஜிக்கு சென்ற முஸ்லிம் பெண்ணை, அவரது சமூக வாலிபர்கள் கடத்திச் சென்று, கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் மறைவதற்குள் மீண்டும் அதுபோன்று சம்பவம் நடந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

