சச்சரவை தவிர்த்து ஒற்றுமையுடன் வாழ்வோம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேச்சு
சச்சரவை தவிர்த்து ஒற்றுமையுடன் வாழ்வோம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேச்சு
ADDED : ஜன 23, 2024 12:15 AM

அயோத்தி: ''ராம ராஜ்ஜியம் பிறக்க உள்ளது; நாட்டில் உள்ள அனைவரும் சச்சரவுகளை தவிர்த்துவிட்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
அயோத்தியில் பால ராமர் விக்ரஹம் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் வாயிலாக நம் நாட்டின் சுயமரியாதை திரும்பியுள்ளது. இன்றைய நிகழ்வு புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. இது ஒட்டுமொத்த உலகுக்கே வழிகாட்டியாக இருக்கும்.
பால ராமர், 500 ஆண்டுகளுக்கு பின் அயோத்தி திரும்பியுள்ளார். பலரது நோன்பின் காரணமாகவே இது சாத்தியமாகி உள்ளது. அவர்களின் தன்னலமற்ற தியாகம் மற்றும் கடின உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
கோவில் கும்பாபிஷேகத்துக்காக பிரதமர் மோடி நோன்பு இருந்தார். இனி நாம் அனைவரும் நோன்பு இருக்க வேண்டிய நேரம் இது.
அயோத்தியை விட்டு ராமர் ஏன் வெளியேறினார்? இங்கு ஏற்பட்டகலகங்களின் காரணமாகவே அவர் வெளியேறினார். ராம ராஜ்ஜியம் பிறக்க உள்ளது. நமக்குள் இருக்கும் சச்சரவுகளை தவிர்த்துவிட்டு, சண்டையிடுவதை நிறுத்திவிட்டு அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
ஒற்றுமையுடன் வாழ்வதே மதத்தை உண்மையாக பின்பற்றுவதற்கான நடைமுறை.
இதில், இரக்கம் என்பது இரண்டாவது படி. நீங்கள் சம்பாதிப்பதில் குறைந்த அளவு உங்களுக்காக வைத்துக் கொண்டு மீதியுள்ளதை தர்மம் செய்ய வேண்டும். இது தான் இரக்கத்தின் உண்மையான அர்த்தம்.
நாம் எதிலும் பேராசை கொள்ளாமல் ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும். நம் நாடு உலகுக்கே தலைமை வகிக்க வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இது தேசத்தின் கோவில்: யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: நம் அனைவருக்கும் இதுவொரு உணர்ச்சிப்பூர்வமான தருணம். நம் 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த தேசமே ராம மயமாக காட்சி அளிக்கிறது. ராமாயணம் நிகழ்ந்த திரேதா யுகத்திற்கே வந்தது போல உள்ளது. இது தேசத்தின் கோவில். பால ராமர் விக்ரஹம் நம் தேசத்தின் பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.
ராமரின் அருளால், அயோத்தி தெருக்களில் இனி துப்பாக்கி சத்தம்கேட்காது, ஊரடங்கு இருக்காது. தீபோற்சவமும், ராமோற்சவமும், ஸ்ரீ ராம சங்கீர்த்தனம் மட்டுமே கேட்கும்.
இங்கு ராமரின் வருகை, ராம ராஜ்ஜியத்தின் பிரகடனமாகும். ராமராஜ்ஜியம் என்பது பாகுபாடு இல்லாத ஒரு இணக்கமான சமுதாயத்தை குறிக்கிறது. நம் பிரதமரின் கொள்கைகள், எண்ணங்கள் மற்றும் திட்டங்களின் அடிப்படையும் அதுவாகவே உள்ளன.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரும்பான்மை வகிக்கும் ஒரு தேசத்தில், அவர்கள் தங்கள் கடவுளுக்கான கோவிலை தங்கள் சொந்த நாட்டில் கட்டிக்கொள்ள, 500 ஆண்டுகள் காத்திருந்தது, உலக அளவில் முதல் நிகழ்வாக இருக்கும் என நினைக்கிறேன்.
அயோத்தி, சபிக்கப்பட்டு, பல நுாற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு, திட்டமிட்ட அவமானத்தை எதிர்கொண்டது. ஆனால் ராமரின் வாழ்க்கை நமக்கு பொறுமையையும் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுத்தது.இன்றைக்கு உலகமே அயோத்தியின் பெருமையை போற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

