திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / அயோத்தி விழா துளிகள்.... / அயோத்தி விழா துளிகள்....
/
செய்திகள்
அயோத்தி விழா துளிகள்....
ADDED : ஜன 23, 2024 02:17 AM
நாடு முழுதும் பிரபலமாக உள்ள 50க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் வாயிலாக நடத்தப்பட்ட பிரமாண்ட மங்கள இசை நிகழ்ச்சி, கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.பிராண பிரதிஷ்டைக்கு முன், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மங்கள் த்வானி நிகழ்ச்சியில், உத்தர பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேசம்த, மணிப்பூர், அசாம், சத்தீஸ்கர், புதுடில்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரா, ஜார்க்கண்ட், குஜராத், பீஹார், உத்தரகண்ட் என பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட இசைக் கருவிகளை கலைஞர்கள் உற்சாகத்துடன் இசைத்தனர்.தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மிருதங்கம், தவில், நாதஸ்வரம் மங்கள இசைக்கு மகுடம் சேர்த்தன. அயோத்தியின் புகழ்பெற்ற கவிஞர் யதீந்திர மிஸ்ராவால், இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக பிரபல பின்னணி பாடகர்களான சோனு நிகம், அனுராதா பவுட்வால், ஷங்கர் மஹாதேவன் ஆகியோர் ராமர் பாடல்களை பாடினர்.
இரும்பு பொருட்கள் எதுவும் இன்றி கற்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கோவில் பார்வையாளர்களை வெகுவாக வசீகரித்தது. பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவிலுக்கு வந்த மிக முக்கிய பிரபலங்கள், கட்டட கலையின் அதிசயமாக அயோத்தி கோவில் விளங்குவதாக புகழாரம் சூட்டினர். உயரமான துாண்களும், கண்ணைக் கவரும் சுவர் சித்திரங்களும் அயோத்தியின் அதிசய மாளிகைக்கு அழகு சேர்த்தன. கருவறை உட்பட கோவில் வளாகம் முழுதும் அலங்கரிக்க, 3,000 கிலோ மலர்கள் பயன்படுத்தப்பட்டன. ஹனுமன், கருடன், யானை, மயில் போன்ற மலர் உருவங்கள் கோவில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஹிந்தி நடிகர் - நடிகையர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அனுபம் கேர், அக் ஷய் குமார், ஜாக்கி ஷ்ரோப் அவர் மகன் டைகர் ஷ்ரோப், ஹேம மாலினி, மாதுரி தீக் ஷித், கங்கனா ரனாவத், ரன்பீர் - ஆலியா பட் தம்பதி, விக்கி கவுஷல் - கத்ரீனா தம்பதி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், துார்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில், சீதையாக நடித்த தீபிகா உட்பட ஏராளமான திரைக் கலைஞர்கள், தொழிலதிபர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காசி விஸ்வநாதர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வேத பாராயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட எல்.இ.டி., திரை வாயிலாக, சிலை பிரதிஷ்டை விழாவை ஏராளமானோர் பார்த்தனர். கங்கை ஆற்றின் கரையில் மாலையில், ஒன்பது அர்ச்சகர்களை வைத்து நடத்தப்பட்ட மகா ஆரத்தி விழா பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. காசி விஸ்வநாதர் கோவில் முழுதும் ஏற்றப்பட்ட தீபங்களால் அப்பகுதியே ஜொலித்தது.
உ.பி.,யின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில், பர்சானா என்ற முஸ்லிம் பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. ராமர் சிலை பிரதிஷ்டை தினத்தன்று குழந்தை பிறந்ததால், அக்குழந்தைக்கு, 'ராம் ரஹிம்' என, அவர் பெயர் சூட்டினார். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டதாக, பர்சானா குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், கருவறையில் நிறுவப்பட்டுள்ள பால ராமரின் சிலையை, கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி உள்ளார்.இது குறித்து அவர் நேற்று கூறுகையில், ''தற்போது, உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். என் முன்னோர் மற்றும் ராமரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில், கனவு உலகில் இருப்பது போல் நான் உணர்கிறேன்,'' என்றார்.
ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினி, தனுஷ், அனுபம் கெர்,கத்ரீனா கைப், ஹேம மாலினி, கங்கனா ரணாவத், பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த பிரபலங்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, அயோத்தி பற்றிய ஒரு புத்தகம், உலோகத்தால் ஆன விளக்கு, துளசி மாலை மற்றும் ராமர் பெயர் அச்சிடப்பட்ட காவி துண்டு வழங்கப்பட்டன. மேலும், நான்கு லட்டுகள், சிப்ஸ், முந்திரி மற்றும் திராட்சைகளும் வழங்கப்பட்டன.
கடந்த, 1990களில் அயோத்தி ராமஜென்ம பூமி இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி மற்றும் பெண் துறவியான சாத்வி ரிதம்பரா. ராமர் கோவில் கும்பாபிேஷக நிகழ்வில், சாத்வி ரிதம்பராவை பார்த்த உடன், உமா பாரதி, கண்கள் பனிக்க அவரை ஆரத்தழுவிக் கொண்டார். பின், செய்தியாளர்களிடம் சாத்வி ரிதம்பரா கூறியதாவது: இங்கு ராமர் கோவில் அமையும் பெருமை, ராமருக்கே செல்லும். இதற்கான போராட்டத்தை நடத்த அவரே அனைவருக்கும் வலிமையை தந்தார். ராமர் கோவில் பிரதிஷ்டை நடந்துள்ளதை நினைக்கும் போது, என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இவ்வாறு கூறினார்.இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஏராளமான பக்தர்கள் நேற்று உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டனர்.
ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, அயோத்தியில் வி.வி.ஐ.பி.,க்கள் குவிந்ததால், அயோத்தி விமான நிலையம், 100 விமானங்களின் இயக்கத்தை கண்டது. இதில், விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்தடைவது அடங்கும்.
கும்பாபிஷேக விழாவில், ராமகிருஷ்ணா ஸ்ரீவஸ்தவா, 65, என்ற பக்தர் பங்கேற்றார். கோவில் வளாகத்தில் இருந்தபோது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் மணீஷ் குப்தா தலைமையிலான குழுவினர், அவரை மீட்டு நடமாடும் மருத்துவமனையில் உடனே அனுமதித்தனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர், உயர் ரத்த அழுத்தம் காரணமாக ராமகிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை கண்டறிந்தனர். உடனே, அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின், அங்குள்ள சிவில் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவரை அனுப்பி வைத்தனர். கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் உயிர் காக்கும் நேரத்தில் சிகிச்சை அளித்ததால் பக்தரின் உயிர் காக்கப்பட்டதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.