84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில் பால ராமர் விக்ரஹம் பிராண பிரதிஷ்டை
84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில் பால ராமர் விக்ரஹம் பிராண பிரதிஷ்டை
ADDED : ஜன 23, 2024 01:58 AM

அயோத்தி, பால ராமர் விக்ரஹத்தின் முன் அமர்ந்து முறைப்படியான சடங்குகளை செய்த பிரதமர் நரேந்திர மோடி, சரியாக 84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில், ராமர் விக்ரஹத்திற்கான பிராண பிரதிஷ்டையை செய்து முடித்தார். அதன் பின், சாஷ்டாங்கமாக விழுந்து ராமப் பிரானை வழிபட்டார்.
அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்து முடிந்தது. கோவில் முன் போடப்பட்டு இருந்த நாற்காலிகளில் 8,000க்கும் மேற்பட்ட வி.வி.ஐ.பி.,க்கள் அமர்ந்திருக்க, புதுடில்லியில் இருந்து விமானம் வாயிலாக பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார்.
தங்க நிறத்தில் ஜொலிக்கும் குர்தா, கிரீம் நிறத்திலான வேஷ்டி மற்றும் மேல் துண்டு அணிந்திருந்த பிரதமர் மோடி, கையில் பால ராமருக்கான வெள்ளி குடையை, பட்டு துணியில் ஏந்தியபடி கோவிலை நோக்கி நடந்து வந்தார். கோவில் கருவறைக்குள் அவர் நுழைந்ததும், அவருக்காக போடப்பட்டு இருந்த மரப்பலகையில் அமர்ந்தார்.
அவரை சுற்றி உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோர் அமர்ந்தனர்.
முதலில் பிராண பிரதிஷ்டைக்கான சங்கல்பம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, பின் அதற்கான சடங்குகளை செய்ய துவங்கினார். கோவில் அர்ச்சகர் மந்திரங்களை ஓத, பிரதிஷ்டைக்கான சடங்குகள் துவங்கின.
சில நிமிடங்களில் சடங்குகள் முடிவடைந்ததும், பிரதமர் மோடி பாவனையாக பால ராமர் விக்ரஹத்தின் கண்களை திறந்தார். சரியாக 84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்தத்தில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன் பின் ராமர் விக்ரஹத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பிரதமர் வழிபட்டார். ராமரின் பாதங்களில் மலர்களை சமர்ப்பித்தார். பின், ஒவ்வொரு தலைவர்களாக ராமர் பாதத்தில் மலர்களை வைத்து வழிபட்டனர்.
அபிஜித் முகூர்த்தம் என்பது, ஜோதிட சாஸ்திரப்படி, நடுப்பகலின் முந்தைய மற்றும் பிந்தைய ௨௪ நிமிடங்களை குறிக்கும். இதில் குறிப்பிட்ட சில வினாடிகள் மட்டுமே மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி, நேற்று பகல் ௧௨:௨௯ல் இருந்து பகல் ௧௨:௩௧ மணிக்கு இடைப்பட்ட, குறிப்பிட்ட ௮௪ வினாடிகள் மிகவும் சிறப்பான நேரமாக கணிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.

