'பாலகிருஷ்ணா பிளாக்மெயில் ராஜா' ம.ஜ.த., தலைவர் குமாரசாமி கிண்டல்
'பாலகிருஷ்ணா பிளாக்மெயில் ராஜா' ம.ஜ.த., தலைவர் குமாரசாமி கிண்டல்
ADDED : பிப் 01, 2024 11:17 PM

ராம்நகர்: ''காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, பிளாக்மெயில் ராஜா,'' என, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.
ராம்நகர் பிடதியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில், வெற்றி பெறாவிட்டால் வாக்குறுதித் திட்டங்கள் நிறுத்தப்படும் என்று, அந்த கட்சி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறியுள்ளார். பிளாக்மெயில் செய்வதில் அவர் ராஜா. ஆனால் அவரது வார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பது தேவையற்றது.
தேர்தலில்போது மாகடி மக்களுக்கு, பணம் கொடுத்து ஏமாற்றினார். லோக்சபா தேர்தலுக்கு பின்பு, வாக்குறுதித் திட்டங்களை நிறுத்தலாமென, காங்கிரஸ் கட்சிக்குள் விவாதித்து இருப்பர் என்று நினைக்கிறேன். அந்த விவாதத்தின் வெளிப்பாடு தான், இப்போது வெளியாகி உள்ளது.
எனக்கு தெரிந்து ஐந்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றலாம். ஆனால் சரியான பாதையில் சென்றால் மட்டுமே அது சாத்தியம். நாங்கள் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம்.
எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தருவர் என்று தெரியவில்லை. ஆனாலும் கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்வோம். இந்த விஷயத்தில் ம.ஜ.த., தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

