ராமர் கோவில் பூமி பூஜை பா.ஜ. - எம்.பி.க்கு எதிர்ப்பு
ராமர் கோவில் பூமி பூஜை பா.ஜ. - எம்.பி.க்கு எதிர்ப்பு
ADDED : ஜன 23, 2024 05:48 AM

மைசூரு: ராமர் கோவில் பூமி பூஜையில், மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா பங்கேற்க, தலித் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அயோத்தி ராமர் கோவில் ராமர் சிலையை, மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார். சிலையை வடிவமைக்க மைசூரு அருகே ஹரோஹள்ளியில் இருந்து, பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டன. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படுமென, மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.,தேவகவுடா அறிவித்திருந்தார்.
அதன்படி ராமர் கோவில் கட்டுவதற்காக, பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்க மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா அங்கு வந்தார். ஆனால் அவரை பூமி பூஜையில் பங்கேற்கவிடாமல், தலித் அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.
'மைசூரு தசராவின்போது, மகிஷா தசரா நடத்த எதிர்ப்புத் தெரிவித்த நீங்கள், எங்கள் கிராமத்தில் நடக்கும், பூமி பூஜையில் பங்கேற்கக் கூடாது' என, அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை எம்.எல்.ஏ., ஜி.டி., தேவகவுடா சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், யாரும் சமாதானம் ஆகவில்லை.
'பிரதாப் சிம்ஹா சென்றால் தான், பூமி பூஜை நடக்கும்' என, அவர்கள் தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி அங்கிருந்து, பிரதாப் சிம்ஹா புறப்பட்டுச் சென்றார்.

