பால ராமர் சிலைக்கு கல் கிடைத்த இடத்தில் நாளை பூமி பூஜை
பால ராமர் சிலைக்கு கல் கிடைத்த இடத்தில் நாளை பூமி பூஜை
ADDED : ஜன 21, 2024 12:46 AM

மைசூரு : ''பால ராமர் சிலைக்காக கண்டெடுக்கப்பட்ட கல் கிடைத்த பகுதியில், நாளை ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடத்தப்படும்,'' என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் 'பால ராமர்' விக்ரஹம், மைசூரு மாவட்டம், ஜெயபுரா ஹோப்ளியில் உள்ள ஹரோஹள்ளியில் ராம்தாஸ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, சாமுண்டீவரி தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா நேற்று அளித்த பேட்டி:
பால ராமர் விக்ரஹம் செய்ய கல் கிடைத்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, ஹரோஹள்ளி, குஜ்ஜேகவுடாபூர் கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, இம்முடிவு எட்டப்பட்டு உள்ளது.
அயோத்தியில் சிலை நிறுவப்படும் நாளை, இங்கு ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடத்தப்படும். அன்று காலை 6:00 மணி முதல் பஜனை நிகழ்ச்சி நடக்கும். ராமரின் பக்தர்கள் பங்கேற்கலாம்.
ராம பக்தரான பிரதமர் நரேந்திர மோடி, மைசூரு வந்தபோது சாமுண்டீஸ்வரி கோவிலில் அரைமணி நேரம் தியானம் செய்தார். அந்த அன்னையின் ஆசியால் தான், பால ராமர் சிலைக்கு தேவையான கல் கிடைத்து உள்ளது.
கல் கண்டெடுக்கப்பட்ட இடம், தற்போது ஆலயமாக உள்ளது. எனவே, மக்களிடம் நன்கொடை வசூலித்து, ராமர் கோவில் கட்டப்படும்.
சிலையை செதுக்கிய சிற்பி அருண் ஜோகிராஜ், வரும் 27ம் தேதிக்கு பின் மைசூரு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. அவரை கவுரவித்து, ஹரோஹள்ளி ராமர் கோவிலில் சிலை வடிக்கும்படி கேட்டு கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

