மாண்டியாவை தாரை வார்க்கும் பா.ஜ.,வால் சுமலதா அதிர்ச்சி
மாண்டியாவை தாரை வார்க்கும் பா.ஜ.,வால் சுமலதா அதிர்ச்சி
ADDED : ஜன 13, 2024 11:20 PM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியை கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு விட்டுக்கொடுக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதனால் எம்.பி., சுமலதா அம்பரிஷ் கலக்கமடைந்துஉள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு கர்நாடக பா.ஜ., தயாராகி வருகிறது. இம்முறை ம.ஜ.த.,வுடன் பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து, இன்னும் முடிவாகவில்லை.
பொங்கல் பண்டிகை முடிந்த பின், இதுகுறித்து, முன்னாள் முதல்வரும், மாநில ம.ஜ.த., தலைவருமான குமாரசாமி, டில்லிக்குச் சென்று பா.ஜ., முக்கிய தலைவர்களை சந்தித்து, ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
மாண்டியா, ம.ஜ.த.,வின் பாதுகாப்பு கோட்டை. இந்த தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தர பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இதனால் எம்.பி., சுமலதா அம்பரிஷ் கலக்கமடைந்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், நிகில் குமாருக்கு எதிராக களமிறங்கிய சுமலதா வெற்றி பெற்றார். இவருக்கு பா.ஜ., ஆதரவளித்தது.
தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி, சுமலதாவுக்கு ஓட்டு போடும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்பின் இவர் பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்தார். இம்முறை பா.ஜ., சார்பில் போட்டியிட, சுமலதா விரும்பினார். ஆனால் தன்னுடன் கூட்டணி வைத்துள்ள ம.ஜ.த.,வுக்கு விட்டுக்கொடுக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.
எனவே, சுயேச்சையாக போட்டியிடும்படி, சுமலதாவுக்கு ஆதரவாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். விரைவில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட, பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களை சந்தித்து தனக்கு சீட் அளிக்கும்படி, வேண்டுகோள் விடுக்க சுமலதா திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் மாண்டியா தொகுதியில், வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளரை தேடும் காங்கிரஸ், சுமலதாவுக்கு வலை விரித்துள்ளது. ஒருவேளை இவர் காங்கிரசுக்கு சென்றால், ஒக்கலிகர் ஓட்டுகள் சிதறும் வாய்ப்புள்ளது. இதை மனதில் கொண்டு, பா.ஜ., சுமலதாவை சமாதானம் செய்யுமென, ம.ஜ.த., நம்புகிறது.

