சாதுக்கள் மீது கொடூர தாக்குதல் மே.வங்கத்தில் 12 பேர் கைது
சாதுக்கள் மீது கொடூர தாக்குதல் மே.வங்கத்தில் 12 பேர் கைது
ADDED : ஜன 13, 2024 11:55 PM
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் என கருதி, மூன்று சாதுக்களை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கங்காசாகரில் மகர சங்கராந்தி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதில் பங்கேற்க உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சாதுக்கள் கடந்த 11ம் தேதி வாகனத்தில் வந்தனர்.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தை அவர்கள் அடைந்தபோது, கங்காசாகருக்கு எப்படி செல்வது என வழி தெரியாமல் தவித்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற மூன்று சிறுமியரை இடைமறித்து வழி கேட்டனர். ஆனால், அவர்களை பார்த்து, அச்சிறுமியர் கூச்சலிட்டபடி ஓடினர்.
இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, சாதுக்களை தாக்கியதுடன், அவர்களின் வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார், சாதுக்களை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ., மாநில தலைவர் சுகந்த மஜும்தார் கூறுகையில், ''மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., ஆட்சியில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாததை இச்சம்பவம் காட்டுகிறது,'' என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தை, வகுப்புவாத மோதலுக்கு வித்திடும் வகையில் சிலர் பொய் பிரசாரம் செய்வதாக புகார் எழுந்தது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் புருலியா மாவட்ட போலீசார் சமூக வலைதளத்தில், 'சாதுக்கள் தாக்கப்பட்ட விவகாரத்தால் வகுப்புவாத மோதல் எதுவும் நிகழவில்லை.
'இதையும் மீறி சிலர் வகுப்புவாத மோதலை துாண்டும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.

