இரும்புத்தாது கடத்தல் குற்றச்சாட்டு ஜனார்த்தன ரெட்டி மீது வழக்கு பதிவு?
இரும்புத்தாது கடத்தல் குற்றச்சாட்டு ஜனார்த்தன ரெட்டி மீது வழக்கு பதிவு?
ADDED : ஜன 26, 2024 07:00 AM

பெங்களூரு; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, இரும்புத்தாதுவை வெளிநாட்டுக்கு கடத்தியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீது, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய லோக் ஆயுக்தாவின் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு தயாராகிறது.
கர்நாடக பா.ஜ.,வில் பிரபலமான தலைவராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. கட்சி மேலிடத்திலும் செல்வாக்கு இருந்தது. கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில், இவருக்கு முக்கிய பங்கிருந்தது.
சட்டவிரோத சுரங்க தொழில் வழக்கில் சிக்கி, கைதான இவர் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தார். அதன்பின் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்று விடுதலையானார்.
சில காலம் பொது இடங்களில், தென்படாமல் ஒதுங்கி இருந்தார். கோவில்களை வலம் வந்தார். அதன்பின் அரசியலில் தீவிரமானார். தன்னை பா.ஜ., சேர்த்துக்கொள்ளும் என, எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் கட்சி கண்டு கொள்ளாததால், வெறுப்படைந்த ஜனார்த்தன ரெட்டி, கே.ஆர்.பி., எனும் கல்யாண கர்நாடகா முன்னேற்ற கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கினார். சட்டசபை தேர்தலில், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கினார். ஆனால் கொப்பால், கங்காவதி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டி மட்டும் வெற்றி பெற்றார். மற்றவர்கள் தோற்றனர். வரும் லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வந்தார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக சுரங்கத்தொழில் நடத்தி, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான இரும்புத்தாதுவை, வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின்படி, ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான, ஓ.எம்.சி., எனும் ஓபளாபுரம் மைனிங் கம்பெனி மீது, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய, லோக் ஆயுக்தாவின் எஸ்.ஐ.டி., தயாராகிறது.
லோக் ஆயுக்தாவின் அன்றைய நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, தாக்கல் செய்த அறிக்கையில், '2006 முதல் 2010 வரை, ஓ.எம்.சி., சட்டவிரோதமாக 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 19.98 லட்சம் டன் இரும்புத்தாதுவை, சென்னை துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளது' என கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
அதில், 'சென்னை துறை முகம் வழியாக, ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்புத்தாதுவை, கர்நாடகாவின் எம்.பி.டி., மைன்ஸ், ஹிந்த் டிரேடர்ஸ், டபால் நாராயண ரெட்டி மைன்ஸ் உட்பட, மற்ற சுரங்க நிறுவனங்களில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டதாகும்' என குறிப்பிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, லோக் ஆயுக்தா எஸ்.ஐ.டி., 2022ன் ஜூனில் விசாரணை நடத்தியது. இதுவரை மந்தமாக நடந்த விசாரணை, தற்போது சூடு பிடித்துள்ளது. குற்றச்சாட்டை எதிர்கொண்டவர்கள், சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது.
எம்.பி.டி., மைன்ஸ், ஹிந்த் டிரேடர்ஸ், டபால் நாராயணா ரெட்டி மைன்ஸ் என, சம்பந்தப்பட்ட சுரங்க நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பினர். சிலர் விசாரணைக்கு ஆஜராகி, விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. சாட்சிகளையும் சமர்ப்பித்தனர்.
தற்போது இரும்புத்தாதை, சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த குற்றத்தின்படி, ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான ஓ.எம்.சி., மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.ஐ.டி., தயாராகிறது.
இந்த வழக்கில், பல்லாரி, விஜயநகரா மாவட்டங்களின், சில அரசியல்வாதிகளுக்கு தொடர்புள்ளது. இவர்கள் ஜனார்த்தன ரெட்டியுடன் நெருக்கமாக உள்ளவர்கள்.
எனவே சட்டவிரோத சுரங்கத்தொழிலில் தொடர்பு கொண்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவாக வாய்ப்புள்ளதால், அவர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.

