'பாக்யலட்சுமி' திட்டத்தின் பெயர் மாற்றம்: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அறிவிப்பு
'பாக்யலட்சுமி' திட்டத்தின் பெயர் மாற்றம்: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அறிவிப்பு
ADDED : பிப் 24, 2024 11:02 PM

பெங்களூரு: முந்தைய பா.ஜ., அரசு கொண்டு வந்த, பாக்யலட்சுமி திட்டத்தின் பெயரை மாற்ற, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில், முந்தைய பா.ஜ., அரசில், முதல்வராக இருந்த எடியூரப்பா, பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தார். இதற்காக 'பாக்யலட்சுமி' திட்டத்தை செயல்படுத்தினார். பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கு பெண்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் அரசு வந்த பின்னரும் திட்டம் தொடர்கிறது. ஆனால் திட்டத்தின் பெயரை மாற்ற இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:
எடியூரப்பா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட 'பாக்யலட்சுமி' திட்டம் தொடர்கிறது. திட்டத்துக்கு 'பாக்யலட்சுமி சுகன்யா சம்ருத்தி' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 1.21 லட்சம் மனுக்கள் வந்துள்ளன.
இதற்கு முன்பு, பயனாளிகளுக்கு 50,000 ரூபாய் பாண்ட் வழங்கப்பட்டது. சில தொழில்நுட்ப காரணத்தால், இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 3,000 வீதம், 15 ஆண்டுகள் அந்தந்த பயனாளிகளின், தபால் அலுவலக கணக்கில் செலுத்தப்படும்.
இதை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

