ADDED : ஜன 23, 2024 05:58 AM

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த இதே சிறப்பு நாளில் ஏராளமான பச்சிளம் குழந்தைக்கு, நாமகரணம் நடந்தது.
விஜயபுரா நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், விஜயபுராவில் பல்நோக்கு மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு ராமர் கோவில் திறப்பை ஒட்டி, நேற்று வரை ஐந்து நாட்கள் பிரசவம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் இந்த மருத்துவமனைக்கு கர்ப்பிணியர் வருகை அதிகமாக இருந்தது. 18ம் தேதி முதல் நேற்று வரை 61 குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்று பிறந்த 3 ஆண் குழந்தைகளுக்கு ராமர் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டன.
தவிர பெங்களூரில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தன. சிலருக்கு சுக பிரசவம் நடந்தது. சில கர்ப்பிணிகள், இதே நாளில் குழந்தை பெற வேண்டும் என, ஆர்வம் காண்பித்து, டாக்டர்களிடம் கோரிக்கை விடுத்து தங்களுக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டனர்.
வாணி விலாஸ் மருத்துவமனையில், 28 குழந்தைகள், மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனையில் நான்கு, கோஷா மருத்துவமனையில் ஆறு, பல்வேறு தனியார் மருத்துவமனைகளில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேற்று பிறந்தன.
- நமது நிருபர் -

