ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவனை கடத்தி கொன்ற சக நண்பர்கள்!
ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவனை கடத்தி கொன்ற சக நண்பர்கள்!
ADDED : மார் 26, 2025 10:04 AM

புதுடில்லி: டில்லியில் 9ம் வகுப்பு மாணவனை, பணத்துக்காக அவனது நண்பர்களே கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு; டில்லியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவனை, அவனது நண்பர்களே கடத்தி உள்ளனர். பின்னர், மாணவனின் பெற்றோரிடம் ரூ.10 லட்சம் தருமாறு தொலைபேசியில் பேரம் பேசி உள்ளனர்.
பண பேரம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் கடத்தப்பட்ட மாணவனை, சக நண்பர்களே அடித்து உதைத்து கொலை செய்து பால்ஸ்வா ஏரியில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.
மாணவன் கடத்தல் பற்றிய தகவல் கிடைத்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நண்பர்களே மாணவனை பணத்துக்காக கடத்தி பின்னர் கொன்றதை கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவத்தில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, பணத்துக்காக மட்டுமே கடத்தல் நடந்ததா, வேறு ஏதேனும் காரணங்களா என்பதை பற்றி விசாரித்து வருகின்றனர்.