ADDED : ஜன 24, 2024 05:52 AM

பெங்களூரு : அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, கலால்துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாபூர் லஞ்சம் வாங்குவதாக, அமலாக்கத்துறையில், சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, முதல்வரின் மகன் எதீந்திரா லஞ்சம் வாங்குவதாக, முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, லஞ்சம் வாங்குவதாக சில அமைச்சர்கள் மீதும் எதிர்க்கட்சியினர் புகார் கூறி இருந்தனர். ஆனால் குற்றச்சாட்டுகளை முதல்வரும், அமைச்சர்களும் மறுத்து வந்தனர். அதன் பின்னர் இந்த பிரச்னை சற்று ஓய்ந்து இருந்தது. தற்போது மீண்டும் துவங்கி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர், அமலாக்கத்துறையில் அளித்த புகார்:
கர்நாடகா கலால்துறை அமைச்சர் ஆர்.பி., திம்மாபூர், தன் துறையில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய, லஞ்சம் வாங்குகிறார். இதுவரை நடந்த இடமாற்ற லஞ்சம் மூலம் 18 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
இதில் அமைச்சருக்கு 13 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மீதம் 5 கோடி ரூபாய், கலால்துறை முக்கிய அதிகாரிகளுக்கு சென்றுள்ளது.
இதற்கு அரசும் துணை போகிறது. லஞ்சம் வாங்கும் அமைச்சர், அவருக்கு உதவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.

