விஜயபுரா மாநகராட்சியை கைப்பற்றியது காங்., எத்னால் கோட்டையை வீழ்த்திய அமைச்சர்
விஜயபுரா மாநகராட்சியை கைப்பற்றியது காங்., எத்னால் கோட்டையை வீழ்த்திய அமைச்சர்
ADDED : ஜன 10, 2024 12:08 AM

விஜயபுரா : விஜயபுரா மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இதன்மூலம் பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னாலுக்கு, அமைச்சர் எம்.பி. பாட்டீல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து |உள்ளார்.
வளைக்க முயற்சி
மொத்தம் 35 உறுப்பினர்களை கொண்ட, விஜயபுரா மாநகராட்சிக்கு 2022 அக்டோபரில் தேர்தல் நடந்தது. பா.ஜ., 17 இடங்களில் வென்றது. காங்கிரஸ் பத்து இடங்களையும், சுயேச்சைகள் ஐந்து இடங்களிலும், ஏ.ஐ.எம்.எம்., இரண்டு இடங்களிலும், ம.ஜ.த., ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
மாநகராட்சியை கைப்பற்ற 21 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை என்பதால், சுயேச்சைகளை வளைக்க, பா.ஜ., முயற்சி செய்தது.
இதற்கிடையில் மேயர், துணை மேயர் பதவி இடஒதுக்கீடு தொடர்பாக, கலபுரகி உயர்நீதிமன்ற கிளையில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், மேயர், துணை மேயர் தேர்தலை நடத்த முடியவில்லை. எனினும், கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், விஜயபுரா மாநகராட்சியை கைப்பற்ற முயற்சி செய்தது.
பா.ஜ., கவுன்சிலர் மரணம்
விஜயபுரா மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.பி. பாட்டீல், சுயேச்சை கவுன்சிலர்கள் ஐந்து பேருடன் பேச்சு நடத்தினார். அவர்களும் காங்கிரசுக்கு ஆதரவு தந்தனர். இதுதவிர, ஏ.ஐ.எம்.எம்., - ம.ஜ.த., கவுன்சிலர்கள் ஆதரவும் காங்கிரசுக்கு கிடைத்தது. இதன்மூலம் காங்கிரசுக்கு 18 கவுன்சிலர்கள் ஆதரவு கிடைத்தது.
இந்நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து வந்த, கலபுரகி உயர்நீதிமன்ற கிளை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனுக்களை தள்ளுபடி செய்தது. ஜனவரி முடிவதற்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து, பெலகாவி மண்டல தேர்தல் கமிஷனர் சஞ்சய், நேற்று மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும் என்று அறிவித்தார்.
முஸ்லிம் பெண் மேயர்
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு, பா.ஜ., கவுன்சிலர் விஜயகுமார் பிரதார் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதனால் தேர்தலை தள்ளிவைக்க பா.ஜ., வலியுறுத்தியது.
ஆனால், ஏற்கனவே அறிவித்தபடி மேயர், துணை மேயர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் அமைச்சர் எம்.பி., பாட்டீல், நாகதானா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விட்டல் கதக்தோண்ட், காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள் சுனில் கவுடா, பிரகாஷ் ரத்தோட்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், எம்.எல்.சி., ஹனுமந்த் நிரானி, விஜயபுரா தொகுதி பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி ஆகிய ஏழு பேரும், ஓட்டு போட தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
புறக்கணித்த எம்.எல்.சி.,
காங்கிரஸ் சார்பில் மேயர் பதவிக்கு பொது பிரிவை சேர்ந்த, முஸ்லிம் பெண் மஹேஜபீன் அப்துல் ரசாக் ஹோர்டியும், பா.ஜ., சார்பில் ரஷ்மியும் போட்டியிட்டனர்.
சுயேச்சைகள், ம.ஜ.த., மற்றும் ஏ.ஐ.எம்.எம்., காங்கிரஸ் உறுப்பினர்கள், அமைச்சர்கள் எம்.பி.,பாட்டீல், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விட்டல் கதக்தோண்ட், காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள் சுனில் கவுடா, பிரகாஷ் ரத்தோட் அளித்த ஆதரவால், மஹேஜபீன் 22 வாக்குகள் பெற்றார்.
பா.ஜ., உறுப்பினர்கள் 16 பேர், எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், எம்.பி., ரமேஷ் ஜிகஜிகனகி அளித்த ஓட்டுகள் மூலம், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ரஷ்மி 18 ஓட்டுகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். பா.ஜ., - எம்.எல்.சி., ஹனுமந்த் நிரானி தேர்தலை புறக்கணித்தார்.
முறைகேடு செய்து தேர்தலை நடத்தியதாக கூறி, பா.ஜ., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர் நடந்த துணை மேயரை தேர்ந்து எடுக்கும் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தினேஷ் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதன்மூலம் விஜயபுரா மாநகராட்சியை, காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.
விஜயபுரா தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள, பசனகவுடா பாட்டீல், அமைச்சர் எம்.பி.,பாட்டீலுக்கு, இந்த தேர்தல் கவுரவ பிரச்னையாக இருந்தது.
இறுதியில் தான் பெரியவன் என்பதை நிரூபித்து, பசனகவுடா பாட்டீலுக்கு, எம்.பி.பாட்டீல் அதிர்ச்சி அளித்து உள்ளார். புதிய மேயர், துணை மேயருக்கு அமைச்சர் எம்.பி.பாட்டீல் வாழ்த்து தெரிவித்தார்.

