ADDED : ஜன 13, 2024 11:16 PM

பெங்களூரு: 'பப்'பில் பார்ட்டி நடத்திய வழக்கில், நடிகர் தர்ஷனுக்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா பேசி உள்ளார்.
கன்னட நடிகர் தர்ஷன் நடிப்பில் வெளியான, காட்டேரா திரைப்படம் வெற்றியை, கடந்த 3ம் தேதி பெங்களூரு சுப்பிரமணியநகரில் உள்ள 'பப்'பில் படக்குழு கொண்டாடியது. விடிய விடிய 'பார்ட்டி' நடந்து உள்ளது.
இதுகுறித்து, சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.
கடந்த 11ம் தேதி தர்ஷன் தனது முகநுால் பக்கத்தில், ''என்னை பிடிக்காதவர்கள் எனக்கு எதிராக என்ன செய்தாலும், நான் கோபப்படுவது இல்லை. வருத்தமும் கொள்வது இல்லை,'' என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, மல்லேஸ்வரம் உதவி போலீஸ் கமிஷனருக்கு, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று காலை உத்தரவிட்டார். இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் தர்ஷனுக்கு ஆதரவாக, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா பேசியுள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நடிகர் தர்ஷன் கன்னட திரையுலகின் சொத்து. காட்டேரா திரைப்படம் விவசாயிகள் கஷ்டம் பற்றி எடுத்துக் கூறியுள்ளது. நடிகர்கள் தர்ஷன், டாலி தனஞ்ஜெயாவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, விசாரணை நடத்தியது தவறு. இரவு 1:00 மணி வரை மட்டுமே, 'பப்' திறக்க அனுமதி உள்ளது. ஆனால், நடிகர்கள் சென்ற 'பப்'பை 1:00 மணிக்கு மேல் திறக்க, போலீசார் அனுமதி அளித்தது ஏன்?
மாமூல் வாங்கி கொண்டு, 'பப்' உரிமையாளர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்களா? சர்ச் தெருவில் தினமும் அதிகாலை 3:00 மணி வரை, 'பப்' திறந்து உள்ளது. போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
'பப்'பிற்கு வந்தவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால், தினமும் 1 லட்சம் பேரிடம் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் சுப்பிரமணியநகர் இன்ஸ்பெக்டர், மல்லேஸ்வரம் உதவி போலீஸ் கமிஷனர், வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர்.
அவர்களை முதலில் 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை சந்தித்து பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

