அசாமில் ஊழல் ஆட்சி நடக்கிறது காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேச்சு
அசாமில் ஊழல் ஆட்சி நடக்கிறது காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேச்சு
ADDED : ஜன 19, 2024 01:00 AM

சிவசாகர், நாட்டிலேயே, மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி அசாமில் நடந்து வருவதாக காங்., - எம்.பி., ராகுல் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை வரையிலான, 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்., - எம்.பி., ராகுல் கடந்த 14ல் துவங்கினார்.
மணிப்பூரில் புறப்பட்டு, நாகாலாந்தை கடந்த யாத்திரை, நேற்று காலை அசாம் மாநிலத்தை வந்தடைந்தது.
சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஹாலோவேட்டிங் என்ற இடத்தில், நுாற்றுக்கணக்கான காங்., தொண்டர்கள் ராகுலை வரவேற்றனர். அவர்களிடையே ராகுல் பேசியதாவது:
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடந்து வரும் இனக்கலவரம் காரணமாக, மணிப்பூர் மாநிலமே போர்க்களம் போல் காட்சிஅளிக்கிறது. பிளவுபட்டு கிடக்கும் அம்மாநிலத்துக்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்லை.
நாகா அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் கையெழுத்தான நாகா அமைதி ஒப்பந்தம் என்ன ஆனது என மக்கள் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.
பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பொருளாதார, சமூக, அரசியல் அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றன. நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்த ஆட்சி அசாமில் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

