சிலிண்டர் லாரி கவிழ்ந்தது
சிக்கமகளூரு கலசா பாலேஒலே ரோட்டில் நேற்று காலை, சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், சாலையோர பள்ளத்தில் டிரைவர் லாரியை இறக்கினார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. அங்கு வந்த கலசா போலீசார், டிரைவர் ஆனந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காஸ் ஏஜென்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சாலையில் கிடந்த சிலிண்டர்களை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
ரூ.87 லட்சம் அபேஸ்
மைசூரு போகாதியில் வசிப்பவர் அஸ்வினி. எல்.ஐ.சி., ஏஜென்ட். சில மாதங்களுக்கு முன்பு, அஸ்வினியிடம் மொபைல் போனில் பேசிய மர்மநபர், பங்குச்சந்தையில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டினார். இதை நம்பி பல தவணையில், மர்மநபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு அஸ்வினி 87 லட்ச ரூபாய் அனுப்பினார். ஆனால், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. பணமும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் மைசூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
விபத்தில் ஒருவர் பலி
பெங்களூரு, ஆர்.டி., நகர் பூபசந்திராவில் நேற்று மாலை ஆட்டோவும், பைக்கும் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற தேவராஜ், 43, என்பவர் இறந்தார். விபத்து நடந்ததும் ஆட்டோ டிரைவர் தப்பிவிட்டார்.
மேலும் இருவர் கைது
ஹாவேரி ஹனகல்லில் முஸ்லிம் பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைதாகி இருந்தனர். இந்த வழக்கில் நேற்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணனை கொன்ற தம்பி
சித்ரதுர்கா ஹொசதுர்கா பெலகுரு கிராமத்தில் வசித்தவர் சித்தேஷ், 36. இவரது தம்பி சதீஷ், 34. இவர்களுக்குள் இருவருக்கும், பெற்றோர் சொத்தை பிரிப்பது தொடர்பாக, தகராறு இருந்தது. நேற்று மதியம் ஏற்பட்ட தகராறில், சித்தேஷை கட்டையால் அடித்து சதீஷ் கொலை செய்தார். அவர் கைது செய்யப்பட்டார்.
பெண் அடித்து கொலை
ராம்நகர் பத்ரேகவுடா தொட்டி கிராமத்தில் வசித்தவர் கவுரம்மா, 55. நேற்று காலை கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கவுரம்மாவை யாரோ தலையில், கட்டையால் அடித்துக் கொன்றது தெரிந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. சொத்து தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற, கோணத்தில் விசாரணை நடக்கிறது.

