பா.ஜ., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கவில்லையா?
பா.ஜ., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கவில்லையா?
ADDED : ஜன 13, 2024 11:22 PM
பெங்களூரு: பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கவில்லையா என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹாவேரி மாவட்டம், ஹங்கல் என்ற இடத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் முஸ்லிம் இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார். இதுபற்றி அறிந்த முஸ்லிம் இளைஞர்கள் கும்பல் ஒன்று அந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து, அந்த ஜோடியை தாக்கியது.
வாலிபர் தப்பி ஓடிய பின், அந்த கும்பல் தன்னை காரில் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து, ஆளும்கட்சியை குற்றஞ்சாட்டி வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஆளும் காங்கிரஸ் தூங்கிக்கொண்டிருப்பதாக அவை புகார் கூறியுள்ளன.
மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது, சட்ட செயலிழந்து விட்டதை பிரதிபலிக்கிறது என்றும், காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் குற்றவாளிகள் தைரியமாக செயல்படுகின்றனர் என்றும் மாநில பா.ஜ., காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து இருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கூறியதாவது:
ஹங்கல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெண்களின் பாதுகாப்புக்காக மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிர்பயா திட்டத்தின் கீழ் திட்டங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் நாங்கள் நடவடிக்கை எடுத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.
மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கவே இல்லையா? அப்போது பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர் என்று சொல்ல வேண்டுமா?
இவ்வாறு அவர் கூறினார்.

