ADDED : ஜூன் 25, 2025 10:53 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, முதியவரை கொலை செய்த சம்பவத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி வேணு, 60. இவர், நேற்று முன்தினம் காலை ரயில்வே காலனி அருகே உள்ள அத்தாணிபரம்பு என்ற இடத்தில் சாலையோரம் உள்ள டீக்கடைக்கு முன்பாக இறந்து கிடந்தார்.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த ஹேமாம்பிகா போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரித்தனர். அதில், மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ், 55, வேணுவை கொலை செய்தது தெரிந்தது. பாலக்காடு ரயில் ஸ்டேஷன் அருகே பதுங்கி இருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் கூறியதாவது:
வேணு, ரமேஷ் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகத்தான் வேலைக்கு செல்வார்கள். கடந்த, 23ம் தேதி இரவு ரமேஷ் வாங்கி வந்த மதுவை, இருவரும் சேர்ந்து அருந்தியுள்ளனர். பாட்டிலில் மீதியிருந்த மதுவை நள்ளிரவில் வேணு மட்டும் அருந்தியதால், கோபமடைந்த ரமேஷ் அங்கிருந்த இரும்பு கம்பியால் தாக்கியதில் வேணு இறந்தார். இதையடுத்து தலைமறைவான அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு, கூறினார்.