ADDED : ஜன 13, 2024 11:13 PM

ராய்ச்சூர்: “லோக்சபா தேர்தலில், என் மகன் எதீந்திரா போட்டியிடுவது குறித்து, நானோ, அவரோ ஆலோசிக்கவில்லை,” என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், தன் தந்தை சித்தராமையாவுக்காக, மைசூரின் வருணா தொகுதியை, எதீந்திரா விட்டுக்கொடுத்தார். அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா, தற்போது முதல்வராக இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில், எதீந்திராவை களமிறக்க காங்., மேலிடம் திட்டமிடுவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா, ராய்ச்சூரில் நேற்று கூறியதாவது:
மைசூரு தொகுதியில், எதீந்திரா போட்டியிடுவது குறித்து, நானோ அல்லது அவரோ எங்கும் கூறவில்லை. எதீந்திராவை களமிறக்கினால் வரவேற்பதாக, பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார். அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அவர் ஏதேதோ பேசுகிறார். எதீந்திரா போட்டியிடுவது வெறும் யூகம்தான்.
மதச்சார்பற்ற கொள்கையில் காங்கிரஸ் நம்பிக்கை வைத்துள்ளது. ஒரு ஜாதிக்கு ஆதரவாக இருக்க, நாங்கள் பா.ஜ., அல்ல.
நாங்கள் அனைத்து ஜாதி, சமுதாயத்தினருக்கு ஆதரவாக இருப்பவர்கள்.
ஜாதி, மதம் பெயரில் சமுதாயத்தை உடைப்பவர்கள் அல்ல. காங்கிரஸ் மதச்சார்பற்றது. நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த கட்சி எங்களுடையது.
நகர வளர்ச்சித்துறை அமைச்சர், மைசூரு மாவட்டத்துக்கு லோக்சபா தேர்தல் பார்வையாளராக சென்றிருந்தார். அவர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், வேட்பாளரை தேர்வு செய்வோம்.
தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பிளாக் கமிட்டி தலைவர்கள், முக்கிய தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, அவர்கள் கூறியபடி சீட் அளிக்கப்படும்.
'கிரஹ லட்சுமி' திட்டத்தின் கீழ், 2,000 ரூபாய் எதற்கும் போதாது என, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார். இவர் ஆட்சியில் இருந்தபோது, 100 ரூபாயாவது கொடுத்தாரா?
இவ்வாறு அவர் கூறினார்.

