பெங்களூரில் ஏரிகளை சுற்றி வேலி ரூ.32.50 கோடி ஒதுக்கியது அரசு
பெங்களூரில் ஏரிகளை சுற்றி வேலி ரூ.32.50 கோடி ஒதுக்கியது அரசு
ADDED : ஜன 23, 2024 05:45 AM
பெங்களூரு: பெங்களூரில் ஏரிகளை சுற்றி வேலி அமைக்க, மாநில அரசு 32.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
பெங்களூரில் உள்ள ஏரிகளை, மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்நிலையில் ஏரிக்கரைகளை சிலர் ஆக்கிரமித்து, வீடு, கட்டடம் கட்டுவதாக அரசுக்கு புகார்கள் சென்றன. இதனால் ஏரி நில ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த, ஏரிகளை சுற்றி வேலி அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநகராட்சிக்கு 32.50 கோடி ரூபாயை நேற்று முன்தினம் அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஏரி பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஏரிகளை சுற்றி வேலி அமைக்க, அரசு ஒதுக்கிய நிதியை 2 தவணையாக பயன்படுத்துவோம். முதலில் ஏரிகளை சுற்றிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதன்பின்னர் வேலி அமைக்கும் பணி துவங்கும். முதல் தவணையாக 20 கோடி ரூபாயும், இரண்டாம் தவணையாக 12.50 கோடி ரூபாயும் பயன்படுத்துவோம்.
எலஹங்கா மண்டலத்தில் உள்ள வெங்கடேஷ்புரா, சிங்காபுரா, சீனிவாசபுரா, வீரசாகரா ஏரிகளை சுற்றி, மூன்று கோடி ரூபாய் செலவில், வேலி அமைக்க உள்ளோம். இந்த பணிகள் அடுத்த 3 மாதங்களில் முடியும்.
கிழக்கு மண்டலத்தில் உள்ள ஹலசூரு ஏரியை சுற்றி 70 லட்சம் ரூபாய் செலவில், வேலி அமைக்கப்படும். வேலி அமைப்பதன் மூலம், ஏரி ஆக்கரமிப்பு, ஏரிக்கரையில் குப்பை கொட்டுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

