12 ஆண்டுகளாக பெண்ணுக்கு வீட்டு சிறை சந்தேக புத்தி கணவர் அதிரடி கைது
12 ஆண்டுகளாக பெண்ணுக்கு வீட்டு சிறை சந்தேக புத்தி கணவர் அதிரடி கைது
ADDED : பிப் 01, 2024 11:15 PM
மைசூரு: கடந்த 12 ஆண்டுகளாக மனைவியை வீட்டுச் சிறையில் வைத்திருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு எச்.டி.கோட்டேவின், ஹைரிகே கிராமத்தில் வசிப்பவர் சன்னாலய்யா, 45. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு மனைவியர் உள்ளனர்.
கணவரின் இம்சை தாங்காமல் பிரிந்து சென்றுவிட்டனர். அதன்பின் சுமா, 32, என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன்பு, சன்னாலய்யா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான நாளில் இருந்தே, மனைவியின் நடத்தையை சந்தேகிக்க துவங்கினார். ஒரு நாளும் அவரை நிம்மதியாக வாழவிடவில்லை. அக்கம், பக்கத்தினருடன் பேச விடவில்லை. வீட்டு ஜன்னலையும் மூடியே வைத்திருப்பார்.
சந்தேகம் காரணமாக, மனைவியை வெளியே விடாமல், வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருந்தார்.
தினமும் சித்ரவதை செய்தார். பணிக்கு செல்லும்போது, வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்வார்.
வீட்டுக்குள் கழிப்பறை கிடையாது. எனவே மலம், சிறுநீர் கழிக்க அறையில் பக்கெட் வைத்திருந்தார். இரவு யாருக்கும் தெரியாமல், தானே பக்கெட்டை வெளியே கொண்டு வந்து சன்னாலய்யா சுத்தம் செய்வார்.
இதையறிந்து கேள்வி எழுப்பிய அக்கம் பக்கத்தினரை கொலை செய்வதாக மிரட்டினார். உயிர் பயத்தால் யாரும் வாய் திறக்கவில்லை. கிராமத்து பெரியவர்கள் புத்திமதி கூறியும், சன்னாலய்யா திருந்தவில்லை.
இந்த விஷயம், கிராமத்தில் வசிக்கும் வக்கீல் சித்தப்பாஜிக்கு தெரிந்தது. அவர், எச்.டி., கோட்டே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கூறினார்.
நேற்று முன் தினம் இரவு, போலீசாருடன் வந்து, வீட்டின் பூட்டை உடைத்து சுமாவை மீட்டனர். அவரது பெற்றோரை வரவழைத்து, அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
மனைவியை சிறை வைத்திருந்த சன்னாலய்யாவை, போலீசார் கைது செய்தனர்.

