எனக்கு 75, 80 வயது ஆகவில்லை! பா.ஜ., - எம்.பி., அதீத நம்பிக்கை
எனக்கு 75, 80 வயது ஆகவில்லை! பா.ஜ., - எம்.பி., அதீத நம்பிக்கை
ADDED : பிப் 24, 2024 11:05 PM

கோலார்: “எனக்கு இன்னும் 75, 80 வயது ஆகவில்லை. எனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என, கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமி தெரிவித்தார்.
கோலார் நகரில், நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்ய பா.ஜ., மேலிடம், மூன்று, நான்கு ஆய்வு நடத்தியது. ஐந்து ஆண்டுகளாக கோலார் தொகுதியில், என்னென்ன வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன என்பது, மாநில, தேசிய பா.ஜ., தலைவர்களுக்கு தெரியும்.
லோக்சபா தேர்தலுக்கு, 'பி பாரம்' வந்துவிட்டதை போன்று, சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. என் பதவிக் காலம் இன்னும் முடியவில்லை. ஆனால் சிலர் தங்களுக்கே சீட் என, கூறுகின்றனர். சீட் குறித்து யாரும் என்னுடன் ஆலோசிக்கவில்லை. ராம பக்தர்களுக்கு அநியாயம் நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது.
பெரிய, பெரிய தலைவர்களுக்கே, இன்னும் சீட் உறுதியாகவில்லை. ஊகங்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம். எனக்கு இன்னும் 75, 80 வயது ஆகவில்லை. எனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இம்முறையும் நாங்களே வெற்றி பெறுவோம்.
கர்நாடகாவை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக்குவது, பா.ஜ.,வின் குறிக்கோள். கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, மேலிடம் திட்டம் வகுக்கிறது. இதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

