அம்பேத்கர் சிலைக்கு அவமதிப்பு டயர்களுக்கு தீ வைத்து போராட்டம்
அம்பேத்கர் சிலைக்கு அவமதிப்பு டயர்களுக்கு தீ வைத்து போராட்டம்
ADDED : ஜன 24, 2024 05:52 AM

கலபுரகி : கலபுரகி அருகே, அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, மர்மநபர்கள் அவமதித்தனர். இதை கண்டித்து நடந்த போராட்டத்தில், சாலையில் டயர்களுக்கு தீவைத்து, தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கலபுரகி அருகே கொத்தனுார் என்ற கிராமத்தில் லும்பினி கார்டன் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு அந்த சிலைக்கு மர்மநபர்கள் சிலர், செருப்பு மாலை அணிவித்துவிட்டு தப்பினர்.
நேற்று அதிகாலை சிலைக்கு செருப்பு மாலை, அணிவிக்கப்பட்டு இருந்ததை சிலர் பார்த்தனர். இதை கண்டித்து அங்கு போராட்டம் நடந்தது. கலபுரகி துணை போலீஸ் கமிஷனர் கனிகா சிக்ரிவால், கிராமத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினார்.
ஆனாலும் நேற்று காலை கொத்தனுார் கிராம மக்கள், தலித் அமைப்பினர் ஒன்று சேர்ந்து, கலபுரகி டவுனில் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். விஜயபுரா - கலபுரகி நெடுஞ்சாலையை மறித்தனர்.
டயர்களை சாலையில் போட்டு தீ வைத்தனர். ஊர்வலம் சென்றபோது, கலபுரகி மாவட்ட பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு சொந்தமான, பெட்ரோல் பங்க் மீது கல்வீசி தாக்கினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
நிலைமை கை மீறிச் சென்றதும், போராட்டக்காரர்களிடம் கலபுரகி கலெக்டர் பவுசியா தரணம் பேச்சு நடத்தினார். சிலையை அவமதித்தவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
கொத்தனுார் கிராமத்திற்குச் சென்று, அவமதிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்தார்.
அதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது. ஆனாலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, கலபுரகியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

