ஜன. 31 முதல் மார்ச் 25 வரை அயோத்திக்கு 25 சிறப்பு ரயில்கள்
ஜன. 31 முதல் மார்ச் 25 வரை அயோத்திக்கு 25 சிறப்பு ரயில்கள்
ADDED : ஜன 21, 2024 12:37 AM

பெங்களூரு : “வரும் 31ம் தேதி முதல், மார்ச் 25ம் தேதி வரை, 25 ரயில்கள் மூலம், கர்நாடகாவில் இருந்து 35,000 பேர் அயோத்திக்குச் செல்ல உள்ளனர். மாநிலத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயங்கும்,” என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் கர்நாடகாவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, மாநில தலைவர் விஜயேந்திரா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, உலகமே கொண்டாடுகின்றனர். நாளை பெங்களூரின் அனைத்து பி.வி.ஆர்., திரையரங்குகளிலும் நேரலையில் திரையிடப்படும்.
மாலையில் அனைவரும் அவரவர் வீடுகளில், ஐந்து விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும்.
இந்த விழாவை மக்கள் கொண்டாடும் வகையில், அரசு விடுமுறை அளிக்க வேண்டும். அன்றைய தினம் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கூறியிருந்தார்.
இதை தீவிரமாக கருதி, அசம்பாவித சம்பவங்கள் நடக்காதவாறு அரசு எச்சரிக்கை வகிக்க வேண்டும். பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்.
ராமருக்கும், கர்நாடகாவுக்கும் நிறைய தொடர்பு உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்திய பாரம்பரியத்துக்கு மறுஜென்மம் கிடைத்துள்ளது. இதனால், ராமர் பகதர்களும், ஹிந்துக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், அயோத்திக்குச் செல்ல மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். ராமர் கோவிலில், கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற சந்தன மரங்கள், சந்தன எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
கர்நாடகாவை சேர்ந்த பலரும், ராமர் கோவிலுக்கு தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர். வரும் 31ம் தேதி முதல், மார்ச் 25ம் தேதி வரை, 25 ரயில்களில், கர்நாடகாவில் இருந்து 35,000 பேர் அயோத்திக்குச் செல்ல உள்ளனர். மாநிலத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயங்கும்.
ஒவ்வொரு ரயிலிலும், 1,500 பக்தர்கள் பயணம் செய்யலாம். ரயில் விபரம் விரைவில் அறிவிக்கப்படும். சொந்தமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கர்நாடகா பக்தர்களுக்கு உதவும் வகையில், அயோத்தியில் கன்னட மொழியில் விளக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் கூடாரங்கள், குளியல் அறைகள், கழிப்பறைகள் வசதி செய்யப்பட்டுள்ளன. 48 இடங்களில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில், இரண்டு இடங்களில் கர்நாடகா பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுஉள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

