ADDED : ஜன 24, 2024 05:50 AM

ராய்ச்சூர்: மின் இணைப்பு கொடுக்க 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஜெஸ்காம் உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ராய்ச்சூர் லிங்கசுகுர் அஷிஹாலா தாண்டாவில் வசிப்பவர் பிரேம்குமார், 43. இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கும்படி, லிங்கசுகுர் ஜெஸ்காம் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அந்த மனுவை பரிசீலனை செய்த, உதவி செயற்பொறியாளர் கெஞ்சப்பா பாவிமணி, 40, என்பவர், மின் இணைப்பு கொடுக்க 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதற்கு பிரேம்குமாருக்கும் ஒப்புக்கொண்டார்.
முதல் தவணையாக 5,000 ரூபாயும் கொடுத்துள்ளார்.
மேற்ெகாண்டு பணம் கொடுக்க விரும்பாத பிரேம்குமார், கெஞ்சப்பா மீது ராய்ச்சூர் லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார். அவருக்கு சில அறிவுரைகளை கூறிய லோக் ஆயுக்தா போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
நேற்று முன்தினம் இரவு கெஞ்சப்பாவை சந்தித்த பிரேம்குமார், அவரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், கெஞ்சப்பாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

