ADDED : ஜன 19, 2024 12:31 AM

கர்நாடகாவில் வரலாற்று சிறப்புமிக்க, பழங்கால கட்டடக் கலையை எடுத்துக்காட்டும் வகையில், பல கோவில்கள் உள்ளன. இதில் சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட, கலகேஸ்வரா கோவிலும்அடங்கும்.
ஹாவேரி தாலுகாவில் உள்ளது கலகநாத் கிராமம். இந்த கிராமத்தில் 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, கலகேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. சாளுக்கிய மன்னர்களின் ஆட்சியில் கட்டப்பட்ட இக்கோவில், கட்டட கலைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
ஸ்ரீவெங்கடேச கலகநாதர், அதாவது காதம்பரி பிதாமகன் இக்கோவிலில் வழிபாடு நடத்தியதாகவும், கோவில் வளாகத்தில் அமர்ந்து, புத்தகங்கள் எழுதியதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
இக்கோவிலின் சிற்ப கலைகள், பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. துங்கா, பத்ரா நதிகள் சங்கமிக்கும் இடத்தில், இக்கோவில் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு.
கோவில் கருவறைக்குள் சிவன் சிலை உள்ளது.
இதை ஸ்பர்ஷ லிங்கம் என்று, பக்தர்கள் அழைக்கின்றனர். கோவிலின் கோபுரம் பிரமிட் வடிவத்தில் உயர்ந்து இருக்கிறது. மன்னர்கள் காலத்தின் இசை, நடனம் பற்றி, இந்த கால மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில், கோவில் கல்வெட்டுகள் அமைந்து உள்ளன.
தினமும் காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை, கோவில் நடை திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து இக்கோவில் 355 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. காரில் செல்பவர்கள் தேசிய நெடுஞ்சாலை 4ன் வழியாக சென்று, ராணிபென்னுாரை அடைந்து, அங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம்.
பெங்களூரில் இருந்து ஹாவேரிக்கு அரசு, ஆம்னி பஸ்கள் சேவையும் உள்ளது. ரயிலில் சென்றால் ஹாவேரி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து, பஸ் அல்லது வாடகை கார்களில் கோவிலை சென்றடையலாம்.
- நமது நிருபர் -

