கர்நாடகா வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
கர்நாடகா வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ADDED : ஜன 23, 2024 05:41 AM
பெங்களூரு: கர்நாடகாவின், 224 சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் இறுதி பட்டியலை, தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே வாக்காளர் பட்டியலை, கர்நாடக தேர்தல் ஆணையம் சீராய்வு செய்தது. இறுதிப் பட்டியலை நேற்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் கூறியதாவது:
கர்நாடக வாக்காளர் இறுதி பட்டியலின்படி, தற்போது ஐந்து கோடியே, 37 லட்சத்து, 85 ஆயிரத்து, 815 வாக்காளர்கள் உள்ளனர். இதில் இரண்டு கோடியே, 69 லட்சத்து, 33 ஆயிரத்து, 750 ஆண்கள்; இரண்டு கோடியே, 68 லட்சத்து, 47 ஆயிரத்து, 145 பெண்கள்; 4,920 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த முறை ஆண் வாக்காளர்களுடன் ஒப்பிட்டால், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் மாற்றம், திருத்தம் இருந்தால் படிவம் - 6 மூலமாக விண்ணப்பிக்கலாம். இன்று (நேற்று) முதல், தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளுக்கு, 10 நாட்களுக்கு முன்பு வரை விண்ணப்பித்து மாற்றம், திருத்தம் செய்து கொள்ளலாம்.
இதுவரை 17 லட்சத்து, 47 ஆயிரத்து, 518 வாக்காளர்களுக்கு, தபால் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்பட்டன. 10 லட்சத்து, 76 ஆயிரத்து, 506 வாக்காளர்கள் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளது. இவற்றை வாக்காளர்களுக்கு அனுப்ப ஏற்பாடு நடக்கிறது.
இறுதிப் பட்டியலில் 10 லட்சத்து, 34 ஆயிரத்து, 18 இளம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் மூன்று லட்சத்து, 88 ஆயிரத்து, 527 இளைஞர்கள் புதிதாக பதிவு செய்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,165 ஆக உள்ளது.
மூத்த வாக்காளர்களான 80 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை, 12 லட்சத்து, 71 ஆயிரத்து, 862 ஆக உள்ளது. 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 17,937 ஆக உள்ளது.
மாநிலத்தில் மொத்த ஓட்டு சாவடிகள் எண்ணிக்கை, 58,834 ஆக இருந்தது. இறுதிப் பட்டியலின்படி, 35,02,328 ஓட்டுச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 11,14,257 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 13,43,123 வாக்காளர்களின் பெயரில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் 69.74 சதவீதம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஆன்லைன் வழியாக பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என, என்பதை வாக்காளர்கள் பரிசீலிக்கலாம். தேர்தல் ஆணைய வெப்சைட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை 'அப்டேட்' ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

