ADDED : ஜன 24, 2024 05:49 AM

வடமாநிலங்களில் தேசிய கட்சியான பா.ஜ., அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. ஆனால் தென்மாநிலங்களில் பா.ஜ.,வால் பெரிய அளவில், சாதிக்க முடியவில்லை. இதற்கு மாநில கட்சிகள் செலுத்தும் ஆதிக்கமே காரணம். தமிழகத்தில் தி.மு.க., அல்லது அ.தி.மு.க., ஆந்திராவில் தெலுங்கு தேசம் அல்லது ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிகளே மாறி, மாறி வெற்றி பெறுகின்றன.
ஆனால், கர்நாடகாவில் மாநில கட்சியாக உள்ள, ம.ஜ.த.,வால் தனித்து வெற்றி பெற முடியவில்லை. தேர்தலுக்கு தேர்தல் பா.ஜ., அல்லது காங்கிரசுடன் தொற்றி கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், ம.ஜ.த.,வில் நிலவும் குடும்ப அரசியல் தான்.
'கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, குடும்ப அரசியலை ஊக்குவிக்கிறார்' என்று, தேவகவுடா மீது தொண்டர்களே சில நேரங்களில், அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர். தேவகவுடா குடும்பத்தில் தேவகவுடா, குமாரசாமி, ரேவண்ணா, பிரஜ்வல், சூரஜ் என ஐந்து பேர், எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,- எம்.பி., பதவியில் உள்ளனர்.
நடிப்பில் கவனம்
குமாரசாமியின் மகன் நிகில் கடந்த லோக்சபா தேர்தலிலும், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலிலும் தோற்றார். ஒருவேளை வெற்றி பெற்று இருந்தால் எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., ஆகி இருப்பார். ஆனால், அது நடக்காமல் போய் விட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, நிகிலின் அரசியல் ஆரம்பம் ஆகிவிட்டது.
தனக்கு பின்னர் மகனை அரசியலில், ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று, குமாரசாமி நினைத்து உள்ளார். இதனால் சமீபகாலமாக மகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி உறுதியானதும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க, நிகிலையே குமாரசாமி அனுப்பி வைத்தார்.
பா.ஜ., தலைவர்களுடன் கூட்டணி பேச செல்லும் போதும், மகனை தன்னுடன் அழைத்து செல்கிறார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கும் மகனை அழைத்து சென்று, பா.ஜ., முக்கிய தலைவர்களிடம் அறிமுகப்படுத்தி உள்ளார்.
சட்டசபை தேர்தலில் தோற்ற பின்னர், 'மகன் அரசியலில் ஈடுபட மாட்டார். நடிகரான அவருக்கு கடவுள் நடிப்பு திறமை கொடுத்து உள்ளார். இதனால் நடிப்பில் கவனம் செலுத்துவார்' என்று, குமாரசாமி கூறி இருந்தார்.
மாண்டியாவில் போட்டி?
ஆனால், தற்போது மகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இது ம.ஜ.த.,வில் ஒரு கோஷ்டியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் எதை பற்றியும் குமாரசாமி கவலைப்படவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதி, ம.ஜ.த.,வுக்கு கிடைத்தால், கூட்டணி கட்சி சார்பில் நிகில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை நிகில் போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க ம.ஜ.த.,விலேயே ஒரு கோஷ்டி, காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்திரமற்ற மகனின் அரசியல் வாழ்க்கைக்காக, குமாரசாமி என்னென்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- நமது நிருபர் -

