'ஐ டிட் இட் மை வே' லண்டன் பார்ட்டியில் லலித் - மல்லையா பாட்டு பாடி ஆட்டம்
'ஐ டிட் இட் மை வே' லண்டன் பார்ட்டியில் லலித் - மல்லையா பாட்டு பாடி ஆட்டம்
ADDED : ஜூலை 05, 2025 02:49 AM

புதுடில்லி: பண மோசடி வழக்குகளில் தேடப்படும் தொழிலதிபர்களான லலித் மோடி - விஜய் மல்லையா ஆகியோர், பிரிட்டனின் லண்டனில் நடந்த விருந்தில், 'ஐ டிட் இட் மை வே' என்ற பாடலை ஒன்றாக பாடி ஆட்டம் போட்டனர்.
ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் துவங்குவதற்கு மூளையாக இருந்தவர், பிரபல தொழிலதிபர் லலித் மோடி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின், 2010 முதல், ஐரோப்பிய நாடான பிரிட் டனின் லண்டனில் வசித்து வருகிறார்.
ஐ.பி.எல்., ஏலத்தில் மோசடி செய்தது, லஞ்சம் பெற்றது உட்பட பண மோசடி வழக்குகளும் இவர் மீது உள்ளன.
இதே போல், நம் நாட்டு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இதையடுத்து, லலித் மோடி - விஜய் மல்லையா ஆகியோர் நம் நாட்டில் பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், லண்டனில் சமீபத்தில் நடந்த ஒரு விருந்தில், தொழிலதிபர்கள் லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் ஒன்றாக பங்கேற்றனர். உற்சாகம் பீறிட இருவரும் சேர்ந்து, பிரபல பாடகரான பிராங்க் சினத்ரா பாடிய, 'ஐ டிட் இட் மை வே' என்ற பாடலை பாடி ஆட்டம் போட்டனர்.
இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.